< Back
உலக செய்திகள்
அல்கொய்தா தலைவனை அமெரிக்கா தீர்த்துக்கட்டியது எப்படி? - அதிர வைக்கும் தகவல்கள்
உலக செய்திகள்

அல்கொய்தா தலைவனை அமெரிக்கா தீர்த்துக்கட்டியது எப்படி? - அதிர வைக்கும் தகவல்கள்

தினத்தந்தி
|
4 Aug 2022 7:41 AM IST

அல்கொய்தா தலைவனை அமெரிக்கா தீர்த்துக்கட்டியது எப்படி என்பது குறித்து அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அல் ஜவாஹிரி

அமெரிக்காவால் தீர்த்துக்கட்டப்பட்டுள்ள இவர் யார், இவரது பின்னணிதான் என்ன என்பதை பார்ப்பதற்கு சற்றே வரலாற்றின் பக்கங்களை திரும்பிப்பார்க்க வேண்டியதிருக்கிறது.

2001 செப்டம்பர் 11 என்ற அந்த நாள் அமெரிக்க வரலாற்றின் கறுப்பு அத்தியாயமாக பதிவாகி இருக்கிறது.

அந்த நாளில்தான், பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு, காற்று கூட புக முடியாது என்று அது நாள் வரையில் சொல்லப்பட்டு வந்த அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான வாஷிங்டன் பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் மீதும் விமானங்களை மோதி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த நாள்.

அதற்காக பின்லேடனை தீர்த்துக்கட்ட எண்ணியது அமெரிக்கா. 10 ஆண்டு தேடுதல் வேட்டைக்கு பின்னர் பாகிஸ்தானில் அப்போட்டாபாத்தில் தங்கி இருந்த ரகசிய மாளிகை வளாகத்தில் 2011 மே 2-ந்தேதி 'ஆபரேஷன் நெப்டியூன் ஸ்பியர்' என்ற அதிரடி திட்டத்தில், அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் 24 மணி நேரத்தில் கடலில் புதைத்து இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது பழைய கதை.

புதிய தலைவன் அல் ஜவாஹிரி

இந்த அமெரிக்க தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டித்தந்து, மூளையாக செயல்பட்டதுடன், பின்லேடனுக்கு பின்னர் அந்த இயக்கத்தின் தலைவனாக வந்து, உலகத்துக்கு தலைவலியாக உருவெடுத்தவரின் பெயர்தான் அய்மான் அல் ஜவாஹிரி.

அமெரிக்க தாக்குதலுடன் அல்கொய்தா கைகளை கழுவி விடவில்லை. பாலி, மாம்பசா, ரியாத், ஜகார்த்தா, இஸ்தான்புல், மேட்ரிட், லண்டன் என பல உலக நகரங்களிலும் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றியது. இவற்றில் மூளையாக செயல்பட்டதும் இதே அல் ஜவாஹிரிதான்.

பின்லேடனை தீர்த்துக்கட்டியது, ஜனநாயகக்கட்சியின் ஜனாதிபதியாக விளங்கிய பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் என்றால், இப்போது அல் ஜவாஹிரியை போட்டுத்தள்ள திட்டம் போட்டது, அதே ஜனநாயகக்கட்சியின் ஜனாதிபதியாக விளங்குகிற ஜோ பைடன் ஆட்சி.

ரகசிய திட்டத்துக்கு அஸ்திவாரம்

கடந்த மே, ஜூன் மாதங்களில் இந்த ரகசிய திட்டத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டது.

ஏறத்தாழ 21 ஆண்டு காலம் அமெரிக்காவின் கண்களில் மண்ணைத் தூவி வந்த, இந்த அல் ஜவாஹிரி, ஆப்கானிஸ்தானில் இருப்பதை அமெரிக்கா அறிந்தது.

ஆப்கானிஸ்தானில் அல் ஜவாஹிரியின் இருப்பிடம் எது, அவரது அன்றாட வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது, ஒவ்வொரு நாளிலும் அவர் என்ன செய்கிறார், 'ஏ டூ இசட்' தகவல்கள் வந்தாக வேண்டும் என்று உளவுத்துறைக்கு வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் இருந்து கட்டளை பிறந்தது.

களத்தில் இறங்கியது உளவுத்துறை.

அல் ஜவாஹிரி, ஆப்கானிஸ்தானில், அதன் தலைநகரான காபூலில்தான் வாழ்ந்து வருகிறார், அந்த ரகசிய மாளிகை ஆப்கானிஸ்தானை ஆளும் தலீபான் அமைப்பின் மூத்த தளபதி சிராஜூதீன் ஹக்கானியினுக்கு சொந்தமானது, அந்த மாளிகைக்கு முதலில் அல் ஜவாஹிரியின் மனைவி, மகள் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து அல் ஜவாஹிரி வந்தார் என்பது போன்ற தகவல்கள் கிடைத்து, அவை உறுதி செய்யப்பட்டன. அடுத்த கட்டமாக அவரைப்பற்றிய தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

அதிகாலை நேரத்தில் தனது மாளிகையின் பால்கனியில் தனிமையில் அமர்ந்து கொண்டு அன்றைய நாளிதழ்களை சுடச்சுட வாசிப்பது அவரது விருப்பம் மட்டுமல்ல, வாடிக்கை என நம்பகமான தகவல் கிடைத்தது. 'அடடே, இதுவல்லவா சரியான தருணம்' என நினைத்தது அமெரிக்கா.

கட்டளை பிறந்தது...

அடுத்த காய்களை நேர்த்தியாக நகர்த்தத் தொடங்கியது அமெரிக்கா. அல் ஜவாஹிரியை தீர்த்துக்கட்டுவதற்கான நடவடிக்கைகள் சூடுபிடிக்கத்தொடங்கின. அவரை மட்டுமே கொல்ல வேண்டும், மற்றவர்களுக்கு குறிப்பாக பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என நினைத்தது அமெரிக்கா. அதற்கேற்ப அவரை கொல்வதற்கான உத்திகள் வகுக்கப்பட்டன. எல்லாம் சிதம்பர ரகசியமாக வைக்கப்பட்டன.

அல் ஜவாஹிரி கொலைத்திட்டத்தை அமெரிக்க ராணுவ உளவுத்துறை அதிகாரிகள், வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடனிடம் கடந்த மாதம் 1-ந்தேதி வழங்கினார்கள். இது பற்றி தனது மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை கலந்தார், ஜோ பைடன்.

அதைத்தொடர்ந்து அல் ஜவாஹிரியை தீர்த்துக்கட்டலாம் என அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த 25-ந்தேதி கட்டளை பிறப்பித்தார்.

அதிநவீன ஏவுகணை வீழ்த்தியது

அதைத்தொடர்ந்து, 25 மில்லியன் டாலர் (சுமார் ரூ.200 கோடி) விலை வைத்திருந்த அல் ஜவாஹிரியை தீர்த்துக்கட்டுவதற்கு நாள் குறிக்கப்பட்டது. அந்த நாள், 2022 ஜூலை 31 ஞாயிற்றுக்கிழமை!

அன்றும் வழக்கம் போல அதிகாலை நேரத்தில் தன் மாளிகையின் பால்கனியில் நாளிதழ் வாசிப்பில் அமர்ந்த அல் ஜவாஹிரிக்கு தெரியாது, "இது எனது கடைசி நாள், நாமே செய்தியாகப்போகிறோம்" என்று.

அமெரிக்க ராணுவம் அனுப்பிய டிரோன் காபூலுக்கு பறந்து வந்தது. அந்த டிரோனில் கொலைக்கருவியாக வந்தது, அதிநவீன 'ஹெல்பயர் ஆர் 9 எக்ஸ்' ஏவுகணை. இந்த ஏவுகணை வித்தியாசமானது. இது 6 ரேஸர் போன்ற பிளேடுகளை கொண்டது. இது வெடிக்காது. ஓசைப்படாமல் குறி வைக்கப்பட்ட நபரின் கதையை முடித்து விடும். இந்த ஏவுகணை, ஏறத்தாழ அணு ஆயுதம் போன்றதுதான் என்பது கூடுதல் தகவல்.

அல் ஜவாஹிரியின் மாளிகைக்கு டிரோன் வந்தது. அதில் இருந்து ஹெல்பயர் ஆர் 9 எக்ஸ் ஏவுகணை பறந்து வந்தது. அல் ஜவாஹிரியின் பயங்கரவாத வரலாற்றுக்கு ஓசைப்படாமல் முடிவுரை எழுதியது.

அதிர்ந்தது உலகம்

அமெரிக்காவின் தாக்குதலில் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டார் என்ற தகவலை ஜோ பைடன் வெளியிட, அதிர்ந்து போனது உலகம், "இது அல்லவா, அமெரிக்கா; நினைத்ததை முடிப்பதில் அமெரிக்காவுக்கு நிகர் அமெரிக்கா" என்றுதான் சொல்ல வைத்தது.

ஆனால் அல் ஜவாஹிரியுடன் அல்கொய்தாவின் பயங்கரவாதம் முடிவுக்கு வந்து விடுமா என்று யாராவது கேள்வி கேட்டால் அந்த கேள்விக்கு பதில் இல்லை!

மேலும் செய்திகள்