< Back
உலக செய்திகள்
போருக்கு மத்தியில் ஜோ பைடன், உக்ரைனுக்கு சென்றது எப்படி..? - பரபரப்பு தகவல்கள்
உலக செய்திகள்

போருக்கு மத்தியில் ஜோ பைடன், உக்ரைனுக்கு சென்றது எப்படி..? - பரபரப்பு தகவல்கள்

தினத்தந்தி
|
22 Feb 2023 5:53 AM IST

போருக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்னறிவிப்பின்றி உக்ரைன் சென்றது எப்படி என்பது குறித்து அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கீவ்,

உலகையே அதிர வைக்கிற வகையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. யாரும், ஏன், உக்ரைனோ, ரஷியாவாகூட எதிர்பார்க்காதபடிக்கு இந்த போர் ஓராண்டு காலமாக நீடித்து வருகிறது.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் தோள் கொடுத்து வருகின்றன.

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகிற நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எந்த வித முன்னறிவிப்புமின்றி உக்ரைன் சென்று அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய வரலாறு

நவீன யுகத்தில் எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியும், போர் நடக்கிற ஒரு நாட்டுக்கு சென்றதில்லை.

எனவே தனது உக்ரைன் பயணத்தின்மூலம் ஜோ பைடன் புதிய வரலாறு படைத்திருக்கிறார் என்றே பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தினை ஜோ பைடன் எப்படி மேற்கொண்டார் என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளது.

வழக்கமான விமானம் அல்ல...

* அமெரிக்க நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் இருந்து ஜோ பைடனின் பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்கள் புறப்பட்டன.

* அமெரிக்க ஜனாதிபதிகள் வழக்கமாக வெளிநாட்டு பயணங்களுக்கு விமானப்படையின் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தைத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால் ஜோ பைடன் வழக்கத்துக்கு மாறாக, உள்நாட்டு பயணத்தின்போது பயன்படுத்தக்கூடிய மாற்றியமைக்கப்பட்ட போயிங் 757 ரக விமானமான ஏர்போர்ஸ் சி-32 விமானத்தில் போலந்துக்கு சென்றார். இந்த விமானமானது, அதிகாலை 4.15 மணிக்கு ஆண்ட்ரூஸ்கூட்டுப்படை தளத்தில் இருந்து புறப்பட்டது.

மாதக்கணக்கில் திட்டம்...

* அமெரிக்க ஜனாதிபதியின் உக்ரைன் பயணம், உக்ரைன் மக்களுக்கு முன்கூட்டி தெரியாது. ஆனால் இந்தப் பயணம் குறித்து ரஷியாவுக்கு அமெரிக்கா முன்கூட்டியே தெரிவித்துள்ளது.

* ஜோ பைடனின் இந்தப் பயணத்துக்கான திட்டத்தை வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு முகமை உயர் அதிகாரிகள் பல மாதங்களாக தீட்டி வந்துள்ளனர். இதற்கு கடந்த வெள்ளிக்கிழமையன்றுதான் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

10 மணி நேர ரெயில் பயணம்

* ஜோ பைடனின் விமானம் வழியில் ஜெர்மனியில் தரையிறங்கிறது. ஆனால் அவர் விமானத்தில் இருந்து இறங்கவில்லை. விமானம் எரிபொருளை நிரப்பிக்கொண்டு தனது பயணத்தைத் தொடர்ந்தது.

* ஜோ பைடன் விமானம், போலந்து நாட்டின் ரெஸ்ஸோவ் நகரில் தரை இறங்கியது. அங்கிருந்து 10 மணி நேரம் ரெயில் பயணம் மேற்கொண்டு கீவ் நகரைச் சென்றடைந்தார்.

சுற்றி வளைக்கப்பட்ட வீதிகள்...

* நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு கீவ் நகரை சென்றடைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் பிரிட்ஜெட் பிரிங்க் வரவேற்றார். கீவில் உள்ள மாரின்ஸ்கி அரண்மனைக்கு ஜோ பைடனும், அவரது வாகன அணிவகுப்பும் விரைந்தது அந்த நகரை அதிர வைத்தது. முக்கிய வீதிகள் காரணம் எதுவும் குறிப்பிடாமல் சுற்றி வளைக்கப்பட்டிருந்தன.

* ஜோ பைடன் பயணத்தில் 2 அமெரிக்க பத்திரிகையாளர்கள் மட்டுமே உக்ரைன் அழைத்துச்செல்லப்பட்டிருந்தனர். குறைந்த எண்ணிக்கையிலான உக்ரைன் பத்திரிகையாளர்கள் அமெரிக்க பத்திரிகையாளர்களுடன் ஒரு ஓட்டலில் ஒன்றிணையுமாறு அழைக்கப்பட்டனர். அவர்களுக்கும் ஜோ பைடன் வருகை பற்றி எதுவும் முன்கூட்டி தெரிவிக்கப்படவில்லை.

* அமெரிக்க படைகள் ஏதும் உக்ரைனில் கிடையாது. கீவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் மட்டும் அமெரிக்க கடற்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

கண்காணித்த விமானங்கள்....

* ஜோ பைடன் கீவ் நகரில் இருந்தபோது போலந்து நாட்டின் வான்வெளியில் இருந்து அமெரிக்க கண்காணிப்பு விமானங்கள், கீவ் நகரை கண்காணித்துக்கொண்டிருந்தன.

* ஜோ பைடனின் உக்ரைன் பயணம் பற்றி கீவ் நகரவாசியான மைரோஸ்லவா ரெனோவா என்வர் கூறும்போது, "உக்ரைனுக்கு நேரில் வரவும், எங்களுக்கு ஆதரவு அளிக்கவும் பயப்படாத உலகத்தலைவருக்கு உதாரணம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் " என உருகினார்.

மொத்தத்தில் ஜோ பைடனின் 23 மணி நேர உக்ரைன் பயணம் உலகமெங்கும் பெரும் பரபரப்பையும், அதிர்வுகளையும் ஏற்படுத்தி விட்டது என்றால் அது மிகையல்ல.

மேலும் செய்திகள்