செங்கடலில் வெடித்த டிரோன் படகு.. அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
|சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசும் ஏவுகணைகளை அமெரிக்க ராணுவம் கடலிலேயே தகர்த்து அழித்து வருகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.
இதனால் அமெரிக்க ராணுவத்தின் போர்க்கப்பல்கள் செங்கடல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசும் ஏவுகணைகளை அமெரிக்க ராணுவம் கடலிலேயே தகர்த்து அழித்து வருகிறது.
செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா தலைமையிலான 12 நாடுகள் கூட்டாக எச்சரித்தன. இது இறுதி எச்சரிக்கை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் இந்த எச்சரிக்கையையும் மீறி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் தாக்குதலை நடத்துகின்றனர். நேற்று செங்கடலில் டிரோன் படகை (ஆளில்லா படகு) வெடிக்கச் செய்தனர்.
செங்கடலில் சுமார் 50 கிமீ தூரம் டிரோன் படகை அனுப்பி, ஆழ்கடலில் சரக்கு கப்பல்கள் வரும் பாதைகளில் வெடிக்கச் செய்ததாக அமெரிக்க கடற்படை தலைமை அதிகாரி பிராட் கூப்பர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "வணிகக் கப்பல்கள் மற்றும் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் செல்லும் கடற்பகுதியில் இருந்து 2 மைல் தொலைவுக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. டிரோன் படகு வெடிப்பதை நாங்கள் அனைவரும் பார்த்தோம். அவர்கள் குறிவைத்த இலக்கு என்ன என்பது தெரியவில்லை.
தெற்கு செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவை கடக்கும் வணிக கப்பல்களுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்களால் 25 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்களின் பொறுப்பற்ற செயல்பாடுகள் குறைவதற்கான அறிகுறியே இல்லை" என்றார்.