அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
|இந்திய பெருங்கடல் பகுதியில் லாரிகோ டெஸர்ட் மற்றும் எம்.எஸ்.சி. மெச்சிலா ஆகிய இரு கப்பல்களும், செங்கடல் பகுதியில் மினர்வா லிசா என்ற கப்பலும் தாக்கப்பட்டன.
ஏடன்,
இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் காசாவில் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேலில் இருந்து பணய கைதிகளாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரால் சிறை பிடித்து செல்லப்பட்டவர்களை மீட்கும் நோக்கில் போரானது நடத்தப்படுகிறது.
இதில் பாலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.
இந்நிலையில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இந்திய பெருங்கடல் மற்றும் செங்கடல் பகுதிகளில் செல்லும் கப்பல்களின் மீது அவ்வப்போது, தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர்.
இதற்காக ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த நவம்பரில் இருந்து, இஸ்ரேல் துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களை நோக்கி இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
இந்த தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்த முறை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளை சேர்ந்த கப்பல்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்திய பெருங்கடல் பகுதியில் லாரிகோ டெஸர்ட் மற்றும் எம்.எஸ்.சி. மெச்சிலா ஆகிய இரு கப்பல்களும், செங்கடல் பகுதியில் மினர்வா லிசா என்ற கப்பலும் தாக்கப்பட்டன.
இவை தவிர, அமெரிக்காவின் 2 போர் கப்பல்கள் தாக்கப்பட்டன என தகவல் தெரிவிக்கின்றது. ஆனால், அவற்றின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இந்த பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது பற்றி கப்பல் நிறுவனங்களோ அல்லது அமெரிக்காவின் ராணுவமோ உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.
ஆனால், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கான ராணுவ செய்தி தொடர்பாளரான யஹியா சரீ எப்போது இந்த தாக்குதல் நடந்தது என குறிப்பிடவில்லை. ஆனால், தொலைக்காட்சி வழியே அவர் கூறும்போது, கப்பல்களுக்கு எதிராக ஏவுகணைகளையும், அமெரிக்காவின் போர் கப்பல்களுக்கு எதிராக ஆளில்லா விமானங்களையும் பயன்படுத்தினோம் என்று கூறியுள்ளார்.