ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அதிரடி; அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
|ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்திய அமெரிக்காவின் 3-வது ஆளில்லா விமானம் இதுவாகும்.
சனா,
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு இடையேயான மோதல் 6 மாதங்களாக நீடித்து வருகிறது. இதில், பணய கைதிகளை மீட்கும் தீவிர முயற்சியாக காசாவின் ரபா நகரை தரை வழியே முற்றுகையிட்டு இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. நிதியுதவியும் அளித்து வருகிறது. இதனால், காசாவில் ஆயிரக்கணக்கில் பாலஸ்தீன மக்கள் உயிரிழந்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்த முன்வந்துள்ளனர்.
அவர்கள், கடல் பகுதியில் வரும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் எண்ணெய் கப்பலான ஆண்டிரோமெடா ஸ்டார் என்ற கப்பலை தாக்கினர். இதில், கப்பல் சிறிய அளவில் பாதிப்படைந்தது. செங்கடலில் நடந்த இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்று கொண்டனர்.
இதனை தொடர்ந்து கடற்பகுதியில் தாக்குதலை முறியடிக்க ராணுவ படைகள் குவிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஏமன் நாட்டிற்கு உள்ளே எம்.கியூ.-9 ரீப்பர் வகை ஆளில்லா விமானம் ஒன்றை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தி உள்ளனர்.
ஏமன் நாட்டின் வான்வெளி பகுதியில், அமெரிக்க ராணுவம் இயக்கிய இந்த ஆளில்லா விமானம் அத்துமீறி நுழைந்தபோது, சுட்டு வீழ்த்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. எனினும் இதுபற்றி அமெரிக்கா எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால், அல் ஜசீரா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ஏமன் நாட்டிற்குள் எம்.கியூ.-9 சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் பற்றிய தகவலை சி.பி.எஸ். நியூஸ் உறுதிப்படுத்தி உள்ளது. காசாவில் நடந்து வரும் போர் சூழலில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்திய அமெரிக்காவின் 3-வது ஆளில்லா விமானம் இதுவாகும்.
இதற்கு முன்பு, கடந்த நவம்பர் மற்றும் பிப்ரவரி ஆகிய மாதங்களில் 2 ஆளில்லா விமானங்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர். எனினும், கடல் பகுதிகளில் கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்களை பற்றி அவர்கள் எதுவும் தெரிவிக்காமல் தொடர்ந்து அமைதியாக இருக்கின்றனர் என அமெரிக்க ராணுவம் கூறுகிறது.
இதன்படி, ஆன்டிகுவா நாட்டு கொடியுடன் சென்ற எம்.வி. எம்.ஏ.ஐ.எஸ்.எச். என்ற கப்பல் ஒன்றை ஏவுகணைகள் கொண்டு தாக்கியுள்ளனர் என கூறப்படுகிறது. இதற்கு முன்பு, இஸ்ரேலின் எம்.எஸ்.சி. டார்வின் என்ற கப்பல் மீது ஏடன் வளைகுடா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
அதற்கு முன்பு, அமெரிக்க கொடியுடன் கூடிய மேர்ஸ்க் யார்க்டவுன் கப்பலும் மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய வெராகுரூஸ் கப்பலும் தாக்கப்பட்டன. தொடர்ந்து இந்திய பெருங்கடல் பகுதிகளில் கப்பல்களை இலக்காக கொண்டு தாக்குதல்களை நடத்துவோம் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழுவின் தலைவர் அப்துல்-மாலிக் உறுதிப்பட தெரிவித்து உள்ளார்.
லட்சக்கணக்கானோர் இந்த தாக்குதலில் ஈடுபட தயாராகி, அதற்கான வேலையில் இறங்கி உள்ளனர் என ஹவுதி அமைப்பினர் நடத்தும் ஊடக தகவல் ஒன்றும் தெரிவிக்கின்றது. இதனால், உலக அளவில் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும் சூழல் காணப்படுகிறது.