செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
|பனாமாவைச் சேர்ந்த எம்எஸ்சி கிளாரா மற்றும் நார்வேயைச் சேர்ந்த ஸ்வான் அட்லாண்டிக் ஆகிய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் செங்கடல் பகுதியில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இந்த போரில் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், தங்களை இணைத்துக்கொண்டு, இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். செங்கடல் பகுதியில் வரக்கூடிய இஸ்ரேல் கப்பல்கள் மற்றும் இஸ்ரேலுடன் வர்த்தக தொடர்புடைய கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்நிலையில், ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிகிறது.
இதுபற்றி ஹவுத்தி செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரேயா கூறுகையில், 'பனாமாவைச் சேர்ந்த எம்எஸ்சி கிளாரா மற்றும் நார்வேயைச் சேர்ந்த ஸ்வான் அட்லாண்டிக் ஆகிய கப்பல்கள் செங்கடல் பகுதியில் வந்தபோது தொடர்பு கொண்டோம். ஆனால் கப்பல்களில் உள்ளவர்கள் பதில் அளிக்கவில்லை. அதன்பிறகே தாக்குதல் நடத்தினோம்' என்றார்.