ஹாங்காங்கில் 140 ஆண்டுகளில் இல்லாத கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
|ஹாங்காங்கில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஹாங்காங்,
ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தீவிர வானிலை மாற்றத்தால் மழை மேலும் அதிகரிக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி ஹாங்காங்கிலும், சீனாவின் தெற்கு பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக ஹாங்காங்கில் இரவு 11 மணியில் இருந்து12 மணி வரை 158.1 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதன்மூலம் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு மணி நேரத்தில் பெய்த அதிக மழையாக இது கருதப்படுகிறது.
நிவாரண முகாம்கள்
இந்த கனமழையால் நகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக அங்கு மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். இதனால் அத்தியாவசிய பொருட்களை கூட பெற முடியாமல் பொதுமக்கள் தவிக்கும் நிலை உள்ளது. எனவே 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தேவையின்றி பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசாங்கமும் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அவசர கால சேவைகள் அல்லாத ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும்படி அரசாங்கம் அறிவுறுத்தியது.
போக்குவரத்து முடங்கியது
அங்குள்ள குவாங்டன் மாகாணத்தின் சாலைகள், மெட்ரோ ரெயில் நிலையங்களில் தண்ணீர் சூழ்ந்தது. எனவே போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும் இந்த கனமழை காரணமாக அங்கு ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி இருவர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 20 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.