ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானி குழுமத்தை விசாரிக்க கோரிய மனு நாளை விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு தகவல்
|ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக அதானி குழுமத்தை விசாரிக்க கோரிய மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்குர், ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில் அதானி குழுமத்தை விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார். அதில் "பொதுமக்களின் லட்சக்கணக்கான கோடி ரூபாயை மோசடி செய்த விவகாரத்தில் அதானி குழுமத்துக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும். சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வு இயக்குனரகம், மத்திய நேரடி வரிகள் வாரியம், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம், இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றை கொண்டு விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
அதானி நிறுவனங்களில் முதலீடு செய்த எல்ஐசி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றையும் மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு விசாரிக்க உத்தரவிட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் முன்வைத்த முறையீட்டை சுப்ரீம் கோர்ட்டு ஏற்று, ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்த மனுவையும் பிப்ரவரி 17-ந்தேதி (நாளை) விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.