அதிக இனப்பெருக்க திறன்...!! ஆயுளை குறைக்கும்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்
|வயது முதிர்வுடன் தொடர்புடைய வியாதிகளை பற்றி புரிந்து கொள்வதற்கு இந்த ஆய்வானது முக்கியம் வாய்ந்தது என்று ஆய்வாளர் ஸ்டீவன் ஆஸ்தாத் கூறுகிறார்.
லண்டன்,
பரிணாம வளர்ச்சியில், ஒருவர் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் போகும்போது, அவர் வயது முதிர்வுக்கு ஏன் ஆட்படுகிறார் என்பது ஒரு புதிராகவே உள்ளது. ஒருவர் எப்படி இனப்பெருக்கம் செய்யும் திறனுடன் உள்ளார் என்பதுடன், உண்மையில், வயது முதிர்வானது ஒரு தொடர் நிகழ்வாக உள்ளது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இவை அனைத்தும், லட்சக்கணக்கான ஆண்டுகளாக இயற்கை தேர்வாக உள்ள, சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தகவமைத்து கொள்ளும் தன்மையின் முடிவாக உள்ளது என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதற்காக புதிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இங்கிலாந்தில் உள்ள உயிரியியல் வங்கியில் ஆராய்ச்சி தேவைக்காக பலர் தங்களுடைய மரபணுக்களை சேமித்து வைத்துள்ளனர். இதுபோன்று சேகரித்த 2 லட்சத்து 76 ஆயிரத்து 406 பேரின் மரபணுக்களை ஆய்வு செய்து தரவுகள் திரட்டப்பட்டன. இதில், பல ஆச்சரியம் தரும் தகவல்கள் கிடைத்தன.
இதன்படி, இனப்பெருக்க திறனை ஊக்குவிக்க கூடிய மரபணுவை சுமந்து கொண்டிருக்கும் மக்கள் தங்களுடைய வயது முதிர்வு காலத்தில் தப்பி பிழைப்பதற்கான சாத்தியம் குறைவாக உள்ளது என தெரிய வந்துள்ளது.
பொதுவாக, ஆண்கள் என்றால் தங்களுடைய ஆண்மை தன்மையை அதிகரித்து காட்டும் விசயங்களாக சில விசயங்களை பேணி பாதுகாப்பது வழக்கம். மீசையை வளர்ப்பது, அதுவும் பெரிய அளவில் வளர்ப்பது என்பது, வெளிதோற்றத்தில் ஆண்மை தன்மையை அதிகரித்து காட்டும். பெண்களும் இதுபோன்ற சில விசயங்களை தனித்துவமுடன் பாதுகாத்து வருகின்றனர். எனினும், இனப்பெருக்க விசயத்தில் மனிதர்களின் செயல்பாடுகளின் தன்மை பற்றி ஆய்வாளர்கள் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டு உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜியான்ஜி ஜாங் கூறும்போது, இனப்பெருக்க திறனை ஊக்குவிக்க செய்யும் மரபணு பிறழ்வுகள், வாழ்நாளை குறைக்க கூடும் என்று கூறுகிறார்.
ஆய்வின்படி, இனப்பெருக்க தன்மையை ஊக்கப்படுத்தும் மரபணு தொடர்களில் காணப்படும் வேற்றுமைகளை சுமந்து கொண்டிருக்கும் மக்கள் 76 வயதில் உயிரிழக்க கூடும் என்றும் கூறி அதிர்ச்சி அடைய வைக்கிறார்.
இந்த ஆய்வின் வழியே, கடந்த 1940 முதல் 1969 ஆண்டு வரையிலான தலைமுறைகளிடம், இந்த இனப்பெருக்க தன்மையை ஊக்கப்படுத்தும், மரபணு தொடர்களில் காணப்படும் வேற்றுமைகள் அதிகரித்து காணப்படுகின்றன என தெரிய வந்துள்ளது. மனிதர்களிடம் இந்த பண்பானது தொடர்ந்து வளர்ச்சி பெற்று, வலுப்பெற்றும் வந்துள்ளது என்பதே இதன் சாராம்சம் ஆகும்.
இதுபற்றி ஆய்வில் ஈடுபடாத, ஆனால், வயது முதிர்வு பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவின் பிர்மிங்காம் நகரில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஸ்டீவன் ஆஸ்தாத் கூறும்போது, ஆய்வின்படி, அதிக இனப்பெருக்க தன்மை மற்றும் குறைவான வாழ்க்கை என்னும் பரிணாம வடிவம் ஆனது, நவீனகால மனிதர்களிடம் இன்னும் காணப்படுகிறது என்று ஆய்வு வெளிப்படுத்துகிறது.
இதில், ஆச்சரியப்படுத்தும் விசயம் என்னவெனில், முன்பை விட நாம் சிறந்த ஆரோக்கியம் கொண்டிருந்தபோதும், இந்த வடிவம் ஆனது தொடர்ந்து இன்னும் காணப்படுகிறது என்கிறார் அவர்.
இதேபோன்று, இதற்கு வலு சேர்க்கும் வகையில், பெண்களிடம் காணப்படும் மெனோபாஸ் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். இதன்படி, ஒரு குறிப்பிட்ட மரபணு மாதிரியானது, ஒரு பெண்ணின் கர்ப்பம் தரிக்கும் தன்மையை மேம்படுத்துகிறது. அதனால், அவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்கிறார்.
பரிணாம வளர்ச்சியின்படி, அது பலனளிக்க கூடியது. அவர், ஒரு குழந்தையை பெற்றெடுக்க கூடிய பெண்ணை விட, அதிக ஆற்றலுடன் நிறைய குழந்தைகளை பெற கூடியவராகிறார்.
ஆனால், இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்கும்போது, உடலில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், விரைவில் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் ஆஸ்தாத் கூறுகிறார்.
எனினும், வயது ஆக ஆக, நம்முடைய இனப்பெருக்க செயல்பாடும் ஏன் சரிவடைகிறது? என்பதும் பரிணாம வளர்ச்சி சார்ந்த பார்வையில் தெளிவாக தெரிய வரவில்லை.
அதனுடன், இந்த ஆய்வானது, சுற்றுச்சூழல் மற்றும் சமூக பொருளாதார மாற்றங்கள் ஆகியவை வயது முதிர்வில் ஏற்படுத்த கூடிய பெரிய விளைவுகள் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், வரலாற்றில் முன்பு இல்லாத வகையில், மனிதர்கள் அதிக காலம் வாழ்கின்றனர். அதற்கு, மரபணு சார்ந்த பரிணாம வளர்ச்சியை விட, சிறந்த ஆரோக்கியமே அடிப்படையான காரணம் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இறுதியாக, வயது முதிர்வுடன் தொடர்புடைய வியாதிகளை பற்றி புரிந்து கொள்வதற்கு இந்த ஆய்வானது முக்கியம் வாய்ந்தது.
இந்த மரபணு மாதிரிகளில் சிலவற்றை நாம் ஆய்வு செய்ய முடியும். இதன் உதவியுடன், வாழ்வின் பிற்பகுதிகளில் ஏற்படும் சில குறிப்பிட்ட பாதிப்புகளுடன் அவற்றுக்கு தொடர்பு உள்ளனவா? என உறுதிப்படுத்தவும், அதன் மூலம், அவற்றை கண்காணித்து, பாதிப்புகளை தவிர்க்கவும் சாத்தியம் உள்ளது என ஆஸ்தாத் கூறுகிறார்.