இஸ்ரேல் மீது ஹிஜ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல்; 11 பேர் காயம்
|இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய பகுதியை கண்டறிந்து பதிலடியாக, ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
டெல் அவிவ்,
இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து கடந்த ஆண்டு அக்டோபரில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் அதிரடி தாக்குதல் நடத்தி, வன்முறையில் ஈடுபட்டதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தனர். பலர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை ஓயப்போவதில்லை என் இஸ்ரேல் சூளுரைத்தது. இதற்காக காசா நகரை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டது. ஈரானும் 2 வாரங்களுக்கு பின்னர், இஸ்ரேலை ஏவுகணைகளை கொண்டு கடுமையாக தாக்கியது.
ஆனால், அமெரிக்கா உதவியுடன் இந்த தாக்குதலை இஸ்ரேல் தகர்த்தது. பதிலுக்கு ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த கூடும் என்ற சூழலில் அந்த பகுதியில் பதற்றம் தொற்றி கொண்டது.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் மேற்கே கலிலீ பகுதியில் அரபு அல்-அராம்ஷி நகரில் உள்ள பெத்வாயின் கிராமத்தில் உள்ள சமூகநல கூடத்தின் மீது ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.
இதில், மக்களில் 11 பேர் காயமடைந்தனர். அவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர். ஒருவர் நடுத்தர அளவிலும், 4 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டன. காயமடைந்த ஒருவரின் நிலைமை பற்றி உடனடியாக தெரிய வரவில்லை.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களை அவசரகால மீட்பு பணியாளர்கள் மீட்கும்போது, அருகேயுள்ள பகுதியில் மற்றொரு ஏவுகணை தாக்கியது. இதனால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கூறும்போது, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய பகுதியை கண்டறிந்து பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், இஸ்ரேல் எல்லையையொட்டி 1 கி.மீ. தொலைவில் லெபனான் நாட்டின் ஐடா ஆஷ் ஷாப் கிராமத்தில் வளாகம் ஒன்றிற்குள் பதுங்கியிருந்த ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவித்தது.