இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா பயங்கரவாதி யார்? - வெளியான தகவல்
|லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா பயங்கரவாதி குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பெரூட்,
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 105 பேரை மீட்டது. மேலும், அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் பணய கைதிகள் 8 பேரை இஸ்ரேல் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
ஆனால், 100க்கும் மேற்பட்டோர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
குறிப்பாக, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
சமீபத்தில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பயன்படுத்திவரும் பேஜர்கள் மர்மமான முறையில் ஒரேநேரத்தில் வெடித்து சிதறின. அதற்கு அடுத்தநாள் வாக்கிடாக்கிகளும் வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் மொத்தம் 37 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் பின்னணியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து நேற்று இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. லெபனானின் தலைநகர் பெரூட்டில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவின் முக்கிய தளபதி இப்ராஹிம் அகிலும் (வயது 61) கொல்லப்பட்டார். ஹிஸ்புல்லா படையின் ராட்வான் பிரிவின் தலைவராக இப்ராஹிம் செயல்பட்டு வந்தார்.
ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவின் 2வது முக்கிய தளபதியான இப்ராஹிம் அகிலை குறிவைத்தே இஸ்ரேல் இந்த வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. கொல்லப்பட்ட இப்ராஹிம் அகில் 1980ம் ஆண்டு ஹிஸ்புல்லா அமைப்பில் சேர்ந்துள்ளார்.
1983ம் ஆண்டு லெபனானில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 63 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் இப்ராஹிம் அகிலுக்கும் முக்கிய பங்கு உண்டு. இதனால், இப்ராஹிம் அகிலை பயங்கரவாதியாக அறிவித்த அமெரிக்கா அவரை பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு 7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை அறிவித்தது.
இஸ்ரேல் மீதான தாக்குதல்களிலும் இப்ராஹிம் முக்கிய பங்காற்றியுள்ளார். இப்ராஹிம் தலைமையில் செயல்பட்டு வந்த ராட்வான் பிரிவில் ஹிஸ்புல்லாவினர் சுமார் 10 ஆயிரம் பேர் இடம் பெற்றுள்ளனர். ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவின் 2வது முக்கிய தளபதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் லெபனானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, இப்ராஹிம் கொலைக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.