கண் முன்னே தந்தையை பயங்கரவாதிகள் சுடுவதை கண்டு கண்ணீர் விட்ட இஸ்ரேலிய சிறுமி.!
|கண் முன்னே தந்தையை பயங்கரவாதிகள் சுடுவதை கண்டு இஸ்ரேலிய சிறுமி கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
டெல் அவிவ்,
கடந்த 7-ம் தேதி எதிர்பாராத நேரத்தில் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்ட ஹமாஸ் குழுவினர், ஏராளமான இஸ்ரேலியர்களைக் கொன்று குவித்தனர். அப்படியான தாக்குதலில் தன் கண் முன்னே தந்தையை ஹமாஸ் குழுவினர் சுடுவதைப் பார்த்த சிறுமியின் வீடியோ, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் டேரியா என்கிற குழந்தை தனக்கு நடந்த நிகழ்வைக் கூறுகிறார். வார இறுதியில் தனது தந்தையைக் காண்பதற்காக காசாவிற்கு அருகில் இருக்கும் கிபுட்ஸ் என்ற இடத்திற்கு தனது தம்பியுடன் சென்றுள்ளார். அவரது தந்தை ட்விர் கரப் தனது இணையரோடு அந்தப் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
சம்பவம் நிகழ்ந்த அன்று, அதிகாலையில் டேரியா எழும்போது அவரது தந்தை டேரியாவை வீட்டின் உள்ளறையில் பதுங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். தந்தையின் கையில் கத்தியும் சுத்தியலும் இருந்துள்ளது. சற்று நேரத்தில் உள் நுழைந்த பயங்கரவாதிகள் தந்தையையும் அவரது இணையரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்தக் காட்சிகளைப் போர்வைக்குள் பதுங்கியிருந்தவாறு டேரியா பார்த்துள்ளார்.
போர்வையை விலக்கி டேரியாவைப் பார்த்துவிட்டு ஒன்றும் செய்யாமல் பயங்கரவாதிகள் நகர்ந்துள்ளனர். உதட்டு சாயத்தைப் பயன்படுத்தி வீட்டின் சுவரில் "அல் காசாத்தைச் சேர்ந்தவர்கள் (ஆயுதம் தாங்கிய இஸ்லாமிய குழுவினர்) குழந்தைகளை கொல்வதில்லை" என எழுதிச் சென்றுள்ளனர்.
நான் பயந்துவிட்டேன். இனி அம்மாவை பார்க்கவே முடியாது என நினைத்தேன் யாரையும் பார்க்க முடியாது என நினைத்தேன் என டேரியா பேசுவது காண்போரை கண் கலகங்கச்செய்கிறது.
பயங்கரவாதிகள் வீட்டில் இருந்து சென்ற பிறகு டேரியா உதவி கேட்டு தனது அம்மாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அவரை இஸ்ரேலிய காவல் துறை மீட்டு தாயாரிடம் சேர்த்திருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.