பிரேசிலில் கனமழை, நிலச்சரிவு; 23 பேர் உயிரிழப்பு
|பிரேசிலின் எஸ்பிரித்தோ சான்டோ மற்றும் ரியோ டி ஜெனீரோ ஆகிய மாகாணங்களில் கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ரியோ டி ஜெனீரோ,
தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் தென்கிழக்கே கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளமும் சூழ்ந்து காணப்படுகிறது. தொடர்ந்து, பல பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
வீடுகளை சுற்றி வெள்ள நீர் தேங்கியதில் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். ஆறுகளிலும் வெள்ளம் வழிந்தோடுகிறது. இதனால், கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். கடந்த சில நாட்களாக பிரேசலில் அதிக வெப்பநிலை பதிவாகி இருந்தது.
62 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவான நிலையில், திடீரென மழை பெய்தது ஒருபுறம் குளிர்ச்சி ஏற்படுத்தியபோதும், தொடர் கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்நாட்டின் எஸ்பிரித்தோ சான்டோ மற்றும் ரியோ டி ஜெனீரோ ஆகிய மாகாணங்களில் கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதனால், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. வெள்ள நீர் சூழ்ந்த பகுதியில் உள்ளவர்களை படகுகள் மற்றும் கயிறுகளை கட்டி வெளியே கொண்டு வரும் பணிகள் நடந்து வருகின்றன. மீட்பு படையினர் தொடர்ந்து மக்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இதில் கனமழையால், எஸ்பிரித்தோ சான்டோ மற்றும் ரியோ டி ஜெனீரோ ஆகிய இரு மாகாணங்களிலும் முறையே 15 மற்றும் 8 பேர் என மொத்தம் 23 பேர் வரை உயிரிழந்து உள்ளனர் என்று சிவில் பாதுகாப்பு துறை தெரிவித்து உள்ளது. மழையால், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.