ஆப்கானிஸ்தானில் 2 நாட்களாக பெய்த கனமழை - 39 பேர் உயிரிழப்பு
|மழை வெள்ளத்தில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் சிக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காபூல்,
ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மற்றும் நூரிஸ்தான் மாகாணங்களில் கடந்த இரு தினங்களாக இடைவிடாது கனமழை கொட்டியது. இதனால் அவ்விரு மாகாணங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
சாலைகள், மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கனமழை, வெள்ளத்தால் அங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.
இந்த நிலையில் கனமழைக்கு 9 சிறுவர்கள் உள்பட 39 பேர் பலியானதாகவும், 14 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.