< Back
உலக செய்திகள்
இந்தோனேசியாவில் வெள்ளம், நில சரிவு; 15 பேர் பலி
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் வெள்ளம், நில சரிவு; 15 பேர் பலி

தினத்தந்தி
|
5 May 2024 12:57 AM IST

இந்தோனேசியாவில், வெள்ளம் மற்றும் நில சரிவு பாதிப்புகளில் இருந்து தப்பிப்பதற்காக, 115 பேர் மீட்கப்பட்டு மசூதிகள் அல்லது அவர்களுடைய உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

ஜகார்த்தா,

இந்தோனேசியா நாட்டின் தெற்கே சுலாவெசி மாகாணத்தில் லுவு பகுதியில் கடந்த வெள்ளி கிழமை கனமழை பெய்தது. இதனால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து, நில சரிவுகளும் ஏற்பட்டன. இதில் சிக்கி மொத்தம் 15 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். 2 பேர் காயமடைந்தனர்.

100 வீடுகள் வரை சேதமடைந்து உள்ளன. 42 பேர் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு உள்ளனர். 4 சாலைகளும், ஒரு பாலமும் சேதமடைந்து உள்ளன.

வெள்ளம் மற்றும் நில சரிவு பாதிப்புகளில் இருந்து தப்பிப்பதற்காக, 115 பேர் மீட்கப்பட்டு மசூதிகள் அல்லது அவர்களுடைய உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டின் பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்து உள்ளது. இந்தோனேசியாவில் மழை காலங்களில் நில சரிவு ஏற்பட கூடிய ஆபத்து அதிகம் காணப்படுகிறது.

சில பகுதிகளில் காடுகள் அழிப்பு மற்றும் நீண்டநேரம் மழைப்பொழிவு போன்றவற்றால் நிலைமை மோசமடைந்து உள்ளது. அவர்களை அதிகாரிகள் மீட்கும் முயற்சியின்போது, 1,300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தோனேசியாவில் பருவகால மாற்றம் எதிரொலியாக, சமீபத்திய மழை காலங்களின்போது, எதிர்பாராத, கடுமையான வானிலையை நாடு எதிர்கொண்டு வருகிறது.

கடந்த மாதம், மவுண்ட் ருவாங் எரிமலை சீற்றம் ஏற்பட்டதும், பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லும் உத்தரவை மக்களுக்கு பிறப்பிக்க வேண்டிய நிலை அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. இதனால், வானில் 2 கி.மீ. உயரத்திற்கு எரிமலை சாம்பல், புகை உள்ளிட்டவை பறந்தது. கடந்த மார்ச்சில், சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நில சரிவு பாதிப்புகளில் சிக்கி 30 பேர் பலியானார்கள்.

மேலும் செய்திகள்