< Back
உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளம்:  50 பேர் பலி
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளம்: 50 பேர் பலி

தினத்தந்தி
|
19 May 2024 2:36 AM GMT

ஆப்கானிஸ்தானில் வெள்ளத்திற்கு கோர், பாக்லான் மற்றும் பல்வேறு மாகாணங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

கோர்,

ஆப்கானிஸ்தானில் கோர் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2,500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

வீடுகள், குடியிருப்புகள், நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவிலான விளைநிலம் மற்றும் பழத்தோட்டங்கள் வெள்ளம் சூழ்ந்து பாதிப்படைந்து உள்ளன. பாலங்கள், கால்வாய்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள சுவர்களும் இடிந்து விழுந்தன.

ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்து உள்ளன. பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்த மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. ஆப்கானிஸ்தானில் வெள்ளத்திற்கு பாக்லான் மாகாணம் மற்றும் பல்வேறு மாகாணங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.

இதனால் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் அழிந்து விட்டன. சாலைகள் துண்டிக்கப்பட்டு, வெள்ள நீர் தேங்கியுள்ள சூழலில், மக்கள் தனித்து விடப்பட்டு உள்ளனர். அவசர உதவி தேவைப்படுபவர்களாகவும் உள்ளனர். வெள்ள பாதிப்பில் சிக்கி 50 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.

வடக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களில், 3 மாகாணங்களில் 18 மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்திற்கு 300 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. உலக உணவு அமைப்பு தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்