அமெரிக்காவில் இந்து கோவிலில் மதவெறுப்பு வாசகம்; 10 நாட்களில் 2-வது சம்பவம்
|அமெரிக்காவில் இந்து கோவிலில் மதவெறுப்பு வாசகம் எழுதப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்,
இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 'பாப்ஸ்' (BAPS) (போச்ச சன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) என்ற அமைப்பு சார்பில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இந்து கோவில்கள் கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கலிபோர்னியா மாகாணம் சாக்ரமெண்டோ பகுதியில் அமைந்துள்ள 'பாப்ஸ்' அமைப்பின் இந்து கோவிலில் மர்ம நபர்கள் சிலர் மதவெறுப்பு வாசகத்தை எழுதியுள்ளனர். அதில், "இந்துக்களே திரும்பி செல்லுங்கள்" என்று எழுதப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 17-ந்தேதி இதே போல் நியூயார்க்கின் மெல்வில் பகுதியில் 'பாப்ஸ்' அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஸ்ரீ சுவாமி நாராயணன் கோவிலிலும் மதவெறுப்பு வாசகம் எழுதப்பட்டிருந்தது. இது குறித்து போலீசாரிடம் கோவில் நிர்வாகத்தினர் புகார் தெரிவித்த நிலையில், போலீசார் மதவெறுப்பு வாசகத்தை எழுதிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடந்த 10 நாட்களுக்குள் 2-வது முறையாக நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தால் அங்குள்ள இந்துக்கள் கவலையடைந்துள்ளனர். அமெரிக்காவில் இந்துக்கள் மீதான மதவெறுப்பு தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.