'அக்டோபர் 7 முதல் உலகம் முழுவதும் வெறுப்பு அதிகரித்துள்ளது' - ஐ.நா. சபை தலைவர் கருத்து
|நமது உலகில் வெறுப்புக்கு இடமில்லை என்று ஐ.நா. பொது சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்,
உலகம் முழுவதும் வெறுப்பு பேச்சுகளும், குற்றங்களும் அதிகரித்து வருவதாக ஐ.நா. பொது சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"கடந்த அக்டோபர் 7-ந்தேதி முதல் உலகம் முழுவதும் வெறுப்பும், வெறுப்பு பேச்சுகளும், குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்களிடம் ஒரு தெளிவான செய்தியை கூறுகிறேன். நமது உலகில் வெறுப்புக்கு இடமில்லை. வெறுப்பு பேச்சுகள் வலி மிகுந்த காயங்களை ஆழமாக்குவது மட்டுமின்றி வன்முறையையும், அவநம்பிக்கையையும் தூண்டுகின்றன. இதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.
எல்லா மனிதர்களும் பிறப்பின் அடிப்படையில், சமமான சுதந்திரம், கண்ணியம் மற்றும் உரிமையை கொண்டவர்கள். எனவே வெறுப்பு மற்றும் வெறுப்புப் பேச்சுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்."
இவ்வாறு டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.