இஸ்ரேல் மீது குற்றம்சாட்டுவதா? ஹார்வர்டு மாணவர் அமைப்புகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு
|ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல்தான் பொறுப்பு என குற்றம்சாட்டிய ஹார்வர்டு மாணவர் அமைப்புகளுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பு ஆரம்பித்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் தரப்பு காசா மீது வான்தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களைக் கொன்று போரை தூண்டிய கொடூரமான ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் அரசுதான் முழுமையான பொறுப்பு என்று அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் 33 ஹார்வர்டு மாணவர் அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன.
இஸ்ரேலிய அரசாங்கம் பாலஸ்தீனியர்களை 20 ஆண்டுகளுக்கும் மேலாக திறந்தவெளி சிறையில் வாழ நிர்ப்பந்தித்துள்ளது என்றும் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த அறிக்கை வைரலாக பரவிய நிலையில், மாணவர் அமைப்புகளுக்கு பல்கலைக்கழகத்திலும், பல்கலைக்கழகத்திற்கு வெளியிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த அறிக்கையை இன்ஸ்டாகிராம் தற்காலிகமாக நீக்கியது. எனினும், தொடர்ந்து கண்டனம் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
மாணவர் அமைப்புகளின் இந்த அறிக்கையானது, ஹமாஸ் அமைப்பின் தாக்குதலை நியாயப்படுத்தும் முயற்சி என பேராசிரியர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். வெறுப்பு மற்றும் யூத விரோதத்தை இந்த அறிக்கை பிரதிபலிப்பதாக பல்கலைக்கழகத்தின் யூத மையம் விமர்சித்துள்ளது.