குவாட் உச்சி மாநாட்டை 2024-ம் ஆண்டு இந்தியாவில் நடத்தினால் மகிழ்ச்சி: பிரதமர் மோடி விருப்பம்
|2024-ம் ஆண்டு குவாட் உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்தினால் மகிழ்ச்சி அடைவோம் என பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்து உள்ளார்.
ஹிரோஷிமா,
ஜப்பானிய தலைமையின் கீழ் ஜி-7 உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க வரும்படி பிரதமர் மோடிக்கு, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா விடுத்த அழைப்பின்பேரில் பிரதமர் மோடி மே 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 3 நாட்கள் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
இந்த உச்சி மாநாட்டில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நீடித்த வளம் ஆகியவை பற்றி உறுப்பு நாடுகளுடனான ஜி-7 கூட்டத்தொடரில் பிரதமர் மோடி பேசினார். உணவு, உரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல், உறுதியான உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு ஆகியவை பற்றியும் அவர் பேசியுள்ளார்.
உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக அதில் பங்கேற்கும் தலைவர்கள் சிலருடன் இருதரப்பு சந்திப்புகளையும் அவர் நடத்தினார். இதில், தனது நண்பரை சந்தித்ததில் மகிழ்ச்சி என ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்சுடனான சந்திப்பு பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பிரான்சு நாட்டு அதிபர் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். ஜி-7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும், பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து பேசினார். ரஷியாவின் போருக்கு பின் இரு தலைவர்களின் முதல் சந்திப்பு இதுவாகும்.
அமெரிக்க அதிபர் பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஜப்பானிலேயே குவாட் உச்சி மாநாடு நடத்த முடிவானது. இதன்படி, குவாட் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் தொடங்கி நடந்து வருகிறது.
இதில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகிய 4 நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு உள்ளனர்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, உலகளாவிய நல்ல விசயங்களுக்காக, மக்களின் நலன், வளம் மற்றும் அமைதி ஆகியவற்றை நோக்கிய முயற்சிகளுக்காக குவாட் உச்சி மாநாடு தொடர்ந்து செயல்படும். 2024-ம் ஆண்டு குவாட் உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்தினால் மகிழ்ச்சி அடைவோம் என அப்போது அவர் விருப்பம் வெளியிட்டார்.