< Back
உலக செய்திகள்
இந்தியாவுக்கு நேபாளம் சுதந்திர தின வாழ்த்து
உலக செய்திகள்

இந்தியாவுக்கு நேபாளம் சுதந்திர தின வாழ்த்து

தினத்தந்தி
|
15 Aug 2022 10:50 AM IST

இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தில் நாட்டு மக்களுக்கு அண்டை நாடான நேபாளம் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளது.

காத்மண்டு,



இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, தேசியக்கொடி வண்ணத்திலான தலைப்பாகை அணிந்து வந்திருந்த பிரதமர் மோடி, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி, வணக்கம் செலுத்தி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவையொட்டி, கடந்த ஓராண்டாக அம்ரித் மகோத்சவ் என்ற பெயரிலான இந்திய சுதந்திர அமுதப்பெருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்திய பிரிவினை பயங்கரங்களுக்கான நினைவு தினமும் நேற்று நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்திய சுதந்திர தினத்திற்கு நேபாள அரசு தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளது. நேபாள வெளிவிவகார மந்திரி டாக்டர் நாராயண் காத்கா, இந்திய வெளிவிவகார மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு, நேபாளம் சார்பில் இந்தியாவின் 76-வது சுதந்திர தின மகிழ்ச்சி கொண்டாட்டத்திற்கு தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார். இதனை நேபாள வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதற்கு முன்பு, இந்திய சுதந்திர தினத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அவர் வெளியிட்ட செய்தியில், ஏறக்குறைய 40 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள், ஆகஸ்டு 15-ந்தேதி அன்று 75-வது ஆண்டு விடுதலை கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். காந்தியின் உண்மை மற்றும் அகிம்சை ஆகியவற்றின் உறுதியான செய்தியை வழிகாட்டியாக கொண்ட ஜனநாயக பயணத்தில் இந்திய மக்களுடன் அமெரிக்காவும் இணைகிறது என தெரிவித்து உள்ளார்.

இந்திய அமெரிக்க சமூகத்தினர், அமெரிக்காவை அதிக புதுமையான, எல்லாவற்றையும் உள்ளடக்கிய மற்றும் வலிமையான ஒரு நாடாக உருவாக்கி உள்ளனர் என கூறியதுடன், இந்த ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 75-வது ஆண்டு தூதரக உறவு கொண்டாட்டங்களிலும் ஈடுபடுகிறது என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்