< Back
உலக செய்திகள்
பாலி மாநாட்டு நிறைவு விழாவில் ஜி-20 தலைமைத்துவம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
உலக செய்திகள்

பாலி மாநாட்டு நிறைவு விழாவில் ஜி-20 தலைமைத்துவம் இந்தியாவிடம் ஒப்படைப்பு

தினத்தந்தி
|
16 Nov 2022 2:46 PM IST

இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி-20 கூட்டங்களை நாங்கள் நடத்துவோம் என பாலி மாநாட்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.



பாலி,


இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி-20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு பாலி நகருக்கு சென்றார்.

இதேபோன்று, மாநாட்டில் பங்கேற்க சீனா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட ஜி-20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஆசிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் சென்றனர். இதன்பின், பாலி நகரில் உள்ள அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலில் ஜி-20 மாநாடு தொடங்கியது.

வந்திருந்த தலைவர்களை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ முறைப்படி வரவேற்றார். பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் பலரும் மாநாட்டில் உரையாற்றினர்.

இந்த நிலையில், மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று 2-வது நாளில், பாலி நகரில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த மாங்குரோவ் காடுகள் மற்றும் அந்நாட்டு வழிபாட்டு தலத்திற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பார்வையாளர்களாக சென்றனர். பின்பு மரக்கன்றுகளையும் நட்டனர்.

இன்றைய 2-வது நாளில் பிரதமர் மோடி, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட குறிப்பிட்ட நாட்டு தலைவர்களை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பற்றி பேசினார். பின்பு, பாலி மாநாட்டு நிறைவு விழாவில் ஜி-20 தலைமைத்துவம் இந்தியாவிடம் முறைப்படி இன்று ஒப்படைக்கப்பட்டது.

இதன்படி, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ஜி-20 தலைமையை அதிகாரப்பூர்வ முறையில் பிரதமர் மோடியிடம் இன்று ஒப்படைத்து உள்ளார்.

இதன் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஜி-20 தலைமையை இந்தியா ஏற்று நடத்துவது என்பது ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விசயம். இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி-20 கூட்டங்களை நாங்கள் நடத்துவோம்.

நாம் அனைவரும் இணைந்து ஜி-20 அமைப்பை உலகளாவிய மாற்றத்திற்கான ஒரு வினையூக்கியாக உருவாக்குவோம் என கூறியுள்ளார்.

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய, குறிக்கோள் நிறைந்த, முடிவான மற்றும் செயல் சார்ந்து இருக்கும். அடுத்த ஓராண்டில், கூட்டு நடவடிக்கைக்கு தூண்டுதல் அளிக்கும் வகையிலான, சர்வதேச முதன்மை இயக்கம் ஆக ஜி-20 அமைப்பு பணியாற்றும் வகையில் செய்வது எங்களது கடுமையான முயற்சியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்