இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்; 9 அமெரிக்கர்கள் பலி
|இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் 9 பேர் பலியாகி உள்ளனர் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்து உள்ளது.
வாஷிங்டன் டி.சி.,
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, அதிரடியாக தாக்குதல்களை நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் உள்ளனர். இஸ்ரேலும், படைகளை குவித்து பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த போரில் இரு தரப்பிலும் 1,200 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், சி.என்.என். வெளியிட்டு உள்ள செய்தியில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், இந்த தருணத்தில், 9 அமெரிக்க குடிமகன்கள் கொல்லப்பட்ட தகவலை உறுதிப்படுத்துகிறோம்.
அவர்களின் மறைவுக்கும், அதனால் பாதிக்கப்பட்ட அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டி கொள்கிறோம்.
நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, இஸ்ரேலிய ஆதரவு நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்போம் என அறிக்கை வழியே அவர் தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று, காசாவில் பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டவர்களில் குறிப்பிட்ட அளவில் அமெரிக்கர்களும் உள்ளனர் என இஸ்ரேல் அரசு தெரிவித்து உள்ளது. வருகிற நாட்களில், கூடுதல் ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா உறுதியளித்து உள்ளது.