ஹமாஸ் பயங்கரவாத தாக்குதல்; 3 நாட்களுக்கு முன்பே இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த எகிப்து
|இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த கூடும் என்று 3 நாட்களுக்கு முன்பே அந்நாட்டுக்கு எகிப்து உளவு தகவலை பகிர்ந்து இருந்தது.
கெய்ரோ,
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியிலும் புகுந்து அந்த பகுதியில் இருந்த மக்களை தாக்கியது. இதில், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். எண்ணற்றோரை பணய கைதிகளாகவும் சிறை பிடித்து வைத்தது.
இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படையும் பதிலடி கொடுத்து வருகிறது. காசா பகுதியில் உள்ள கட்டிடங்களை இலக்காக கொண்டு வான்வழி தாக்குதல்களை நடத்துகிறது.
இஸ்ரேலுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இந்நிலையில், லெபனானில் இருந்தும் ஹமாஸ் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், லெபனான் மீதும் இஸ்ரேல் படைகள் தாக்குதலை தொடுத்து உள்ளது.
இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலுக்கு 3 நாட்களுக்கு முன்பே இஸ்ரேலுக்கு எகிப்து எச்சரிக்கை விடுத்தது. உளவு தகவலை பகிர்ந்து இருந்தது என கூறப்படுகிறது.
அடுத்து வரவிருக்கிற நிலைமையை பற்றி இஸ்ரேலை எச்சரித்தோம் என எகிப்து கூறியுள்ளது. இஸ்ரேல் பிரதமருக்கு நேரடியாக உளவு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், காசா அச்சுறுத்தலை இஸ்ரேல் குறைத்து மதிப்பிட்டு விட்டது என எகிப்து அரசு தெரிவித்து உள்ளது. எனினும், உளவு தகவல்களை எகிப்து அளித்தது பற்றிய விசயங்களை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
ஆனால், ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை பற்றிய உளவு தகவல்களை எகிப்து பகிர்ந்தது என இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிப்படுத்தி உள்ளது.
இதேபோன்று, அமெரிக்காவின் வெளிவிவகார குழுவின் தலைவரான மைக்கேல் மெக்கால் செய்தியாளர்களிடம் பேசும்போது, உளவு தகவலை இஸ்ரேலுக்கு எகிப்து பகிர்ந்தது என கூறினார். இந்த சூழலில், ஹமாஸ் பயங்கரவாதிகள் 1,200-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.