போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த ஹமாஸ்; முக்கிய கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்ததாக குற்றச்சாட்டு
|முக்கிய கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்ததால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
காசா முனை,
காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.
இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், இன்னும் 130 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில் 30 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும், அவர்களின் உடல்கள் ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 32 ஆயிரத்து 333 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட மோதலில் 450 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. அமெரிக்கா, கத்தார், எகிப்து போன்ற நாடுகளின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், காசா முனையில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதலை தற்காலிகமாக உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் ஐ.நா. சபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நிராகரித்துள்ளனர். முழுமையான போர் நிறுத்தம், காசா முனையில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறுதல், போரால் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கள் பகுதிகளுக்கு திரும்புதல், உண்மையான கைதிகளை பரிமாறிக்கொள்தல் (பணய கைதிகள்) ஆகிய முக்கிய கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் இதுவரை பதிலளிக்கவில்லை என ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கைகளை இஸ்ரேல் புறக்கணித்ததால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஹமாசின் கோரிக்கைகள் மாய பிம்பம் என்று தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பணய கைதிகள் யார் விடுதலை செய்யப்பட்டபின்னரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும்வரை காசா முனையில் தாக்குதல் தொடரும்' என்றார்.