< Back
உலக செய்திகள்
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் நிராகரித்தது ஹமாஸ்
உலக செய்திகள்

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் நிராகரித்தது ஹமாஸ்

தினத்தந்தி
|
16 April 2024 2:29 PM IST

பணயக் கைதிகளை விடுவிக்கும் முன் ஆறு வார போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்துகிறது.

காசா:

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல், பணயக் கைதிகளை மீட்பதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது. அவ்வகையில், போர் நிறுத்தம் செய்து கைதிகளை பரிமாற்றம் செய்வது தொடர்பாக புதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் ஹமாஸ் அமைப்பு நிராகரித்துள்ளது. இது தொடர்பாக மூத்த இஸ்ரேல் அதிகாரி கூறிய தகவலை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட வேண்டிய பாலஸ்தீன கைதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்தன. ஆனால், ஹமாஸ் தரப்பில் ஒப்பந்தம் ஏற்கப்படவில்லை.

ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக, பெண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் என சுமார் 20 பணயக் கைதிகளை மட்டுமே விடுவிக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. பணயக் கைதிகளை விடுவிக்கும் முன் ஆறு வார போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் ஹமாஸ் வலியுறுத்துகிறது.

'இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் தலைவர் சன்வார் விரும்பவில்லை. அமெரிக்காவின் முன்மொழிவுகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. அப்போதும்கூட, காசா மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை சன்வார் பொருட்படுத்தவில்லை' என இஸ்ரேல் அதிகாரி கூறியிருக்கிறார்.

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் மிகப்பெரிய அளவில் ராக்கெட் தாக்குதலை நடத்தியதுடன், இஸ்ரேலுக்குள் புகுந்தும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் என 1,200 பேர் கொல்லப்பட்டனர். 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக பிடித்து வந்தனர். இந்த தாக்குதல் மிகப்பெரிய போருக்கு வழிவகுத்தது.

பழிக்குப்பழி தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல், காசாவை முழுவதுமாக முற்றுகையிடும்படி ராணுவத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி முதலில் வான்தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிப்பது மற்றும் பணயக்கைதிகளை மீட்பது என்ற குறிக்கோளுடன் காசாவிற்குள் தரைவழி தாக்குதலை தொடங்கியது. காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 33,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்