< Back
உலக செய்திகள்
காசாவின் கட்டுப்பாட்டை இழந்தது ஹமாஸ் அமைப்பு; இஸ்ரேல் மந்திரி
உலக செய்திகள்

காசாவின் கட்டுப்பாட்டை இழந்தது ஹமாஸ் அமைப்பு; இஸ்ரேல் மந்திரி

தினத்தந்தி
|
14 Nov 2023 2:33 AM IST

ஹமாஸ் அமைப்பின் மையங்களை பொதுமக்கள் சூறையாடி வருகின்றனர் என கூறினார்.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், வடக்கு காசா பகுதியில் அமைந்துள்ள பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

இதனால், அந்த மருத்துவமனையில் மருத்துவ சேவை வழங்கப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இந்த மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நாலாபுறமும் சுற்றி வளைத்துள்ளனர். 400 பேர் சிகிச்சை பெறும் நிலையில், புலம்பெயர்ந்த 20 ஆயிரம் பேர் மருத்துவமனை வளாகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

எனினும், ஐ.சி.யூ., ஆக்சிஜன் உபகணரங்களின் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன என கூறப்படுகிறது. இதனால், 7 குழந்தைகள் மற்றும் 27 நோயாளிகள் வரை உயிரிழந்து விட்டனர் என ஹமாஸ் அமைப்புக்கான துணை சுகாதார மந்திரி யூசுப் அபு ரிஷ் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி கேலன்ட் விடுத்துள்ள வீடியோ செய்தியொன்றில், காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இழந்து விட்டது. பயங்கரவாதிகள் தெற்கு நோக்கி தப்பியோடுகின்றனர்.

ஹமாஸ் அமைப்பின் மையங்களை பொதுமக்கள் சூறையாடி வருகின்றனர் என கூறினார். எனினும், அதற்கான சான்று எதனையும் அவர் வெளியிடவில்லை. ஹமாஸ் அமைப்பின் அரசு மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்