< Back
உலக செய்திகள்
ரபாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறாதவரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை - ஹமாஸ்
உலக செய்திகள்

ரபாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறாதவரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை - ஹமாஸ்

தினத்தந்தி
|
29 May 2024 11:30 AM IST

ரபாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறாதவரை தற்காலிக போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

காசா முனை,

காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும், 128 பேர் இன்னும் பணய கைதிகளாக உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை ஒழிக்கும் நடவடிக்கையிலும் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, காசா முனை மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வியில் முடிந்து வருகிறது.

மேலும், காசா முனையில் முக்கிய நகராக உள்ள ரபாவில் இஸ்ரேல் படைகளை குவித்து வருகிறது. எகிப்துடன் எல்லையை கொண்ட ரபாவில் லட்சக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்தனர். எகிப்துடனான ரபா எல்லையில் இஸ்ரேல் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் எகிப்தில் இருந்து ரபா எல்லை வழியாக காசா முனைக்கு மனிதாபிமான உதவிகள், நிவாரண பொருட்கள் கிடைப்பதில் தடைபட்டுள்ளது. இதனிடையே, சமீபத்தில் ரபாவில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ரபா மீது இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பெண்கள் குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் மூத்த அதிகாரிகள் 2 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரபா நகரில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறாதவரை தற்காலிக போர் நிறுத்தம், பணய கைதிகள் விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது. எகிப்துடனான ரபா எல்லையில் இருந்தும் ரபா நகரில் இருந்தும் இஸ்ரேலிய படைகள் வெளியேறினால் மட்டுமே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்தியஸ்தர்களிடம் (எகிப்து, கத்தார்) ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதனால் போர் தொடர்ந்து நீடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்