< Back
உலக செய்திகள்
ஹமாஸ் தலைவா் உடல் கத்தாரில் அடக்கம்
உலக செய்திகள்

ஹமாஸ் தலைவா் உடல் கத்தாரில் அடக்கம்

தினத்தந்தி
|
3 Aug 2024 3:54 AM IST

ஹமாஸ் தலைவரின் இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

தெஹ்ரான்,

பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 250-க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேல் ராணுவம் போர் அறிவித்தது. ஹமாஸ் அமைப்பின் கூடாரமாக விளங்கும் காசா முனையின் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து அதிரடி தாக்குதல் நடத்தி வந்தது. இந்த தாக்குதலில் 38 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனான், ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகள் செயல்பட்டு வருகின்றன. ஹமாஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அங்கே பதுங்கி இருந்து அமைப்புக்கு ஆதரவாக நிதி திரட்டி வருவதாகவும், துருப்புகளுக்கு பயிற்சி அளிப்பதாகவும் இஸ்ரேல் நம்புகிறது.

இதனால் அங்கு ஹமாஸ் அமைப்பினர் தங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசியும் ஆளில்லா விமானங்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய தளபதிகள் பலர் உயிரிழந்தனர். இந்தநிலையில் ஈரானில் வசித்து வந்த ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார்.

ஈரானில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவா் இஸ்மாயில் ஹனியேவின் (வயது 62) உடல் கத்தாரில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்காக தலைநகா் தோஹாவிலுள்ள அப்துல்-அல் வஹாப் மசூதியில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் நூற்றுக் கணக்கானவா்கள் பங்கேற்று ஹனியேவுக்கு அஞ்சலி செலுத்தினா். இதில் கத்தாா் மன்னா் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியும் பங்கேற்றாா்.

இது தவிர, இஸ்மாயில் ஹனியிவுக்கு அடுத்தபடியாக ஹமாஸின் அரசியல் பிரிவு தலைமைப் பொறுப்பை ஏற்கலாம் என்று கூறப்படும் அவரது நெருங்கிய உதவியாளா் காலித் மிஷாலும் ஹமாஸைப் போன்ற மற்றொரு பாலஸ்தீன ஆயுதக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் தலைவா் கலீல் அல்-ஹய்யா உள்ளிட்டோரும் இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்றனா்.

மேலும் செய்திகள்