< Back
உலக செய்திகள்
டேட்டிங் செயலியில் பழக்கம்... பெண்ணை கடத்தி, அடைத்து வைத்து 5 நாட்களாக பலாத்காரம்
உலக செய்திகள்

டேட்டிங் செயலியில் பழக்கம்... பெண்ணை கடத்தி, அடைத்து வைத்து 5 நாட்களாக பலாத்காரம்

தினத்தந்தி
|
10 Jan 2023 4:36 PM IST

அமெரிக்காவில் டேட்டிங் செயலியில் பழக்கம் ஏற்பட்ட பெண்ணை கடத்தி, அடைத்து வைத்து 5 நாட்களாக உணவு, தண்ணீர் கொடுக்காமல் பலாத்காரம் செய்த சம்பவம் தெரிய வந்துள்ளது.



நியூயார்க்,


வெளிநாடுகளில் திருமணத்திற்கு முன்பே ஆண், பெண் இருவரும் நன்றாக பழகுவது, ஒன்றாக ஊர் சுற்றுவது, பாலியல் உறவு போன்ற விசயங்களில் ஈடுபடுவது தெரிந்த விசயம். இதனை டேட்டிங் என கூறி கொள்கின்றனர்.

இதற்கேற்றாற்போல், டேட்டிங் செயலிகளும் வலைதளத்தில் கிடைக்க பெறுகின்றன. இதன்படி, அமெரிக்காவில் நபர் ஒருவர் பம்பிள் என்ற டேட்டிங் செயலி வழியே பெண் ஒருவரை தொடர்பு கொண்டு சாட்டிங்கில் ஈடுபட்டு வந்துள்ளார்.

டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வரும் ஜக்காரி மில்ஸ் என்ற அந்த 21 வயது இளைஞர், அந்த பெண்ணை அவரது வீட்டில் இருந்து தனது குடியிருப்புக்கு அழைத்து வந்துள்ளார்.

விடுமுறை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீட்டில் தனியாக இருந்தபோது, பெண்ணிடம் பேசி கொண்டே இருந்தவர் திடீரென அத்துமீறி பாலியல் உறவில் ஈடுபட முயன்றுள்ளார்.

ஆனால், அதற்கு அந்த பெண் சம்மதிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ஜக்காரி உடனே பெண்ணின் முகத்தில் அதிரடியாக குத்து விட்டுள்ளார். இதனால், அவர் நிலைகுலைந்து போயுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் அவரிடம் தவறாக நடக்க ஜக்காரி முயன்றுள்ளார். அவரது முகம், கழுத்து பகுதியில் ரத்த காட்டேரி போல் கடித்து வைத்தும் உள்ளார். பின்பு ஸ்குரூ டிரைவர் ஒன்றின் பின்பகுதியால் அந்த பெண்ணை அடித்துள்ளார்.

இதனால், அவர் பலத்த காயமடைந்து உள்ளார். அதன்பின்பு 5 நாட்கள் வரை அவரை ஓர் அறையில் ஜக்காரி அடைத்து வைத்து உள்ளார். சாப்பிட உணவு எதுவும் கொடுக்கவில்லை. தண்ணீர் கூட கொடுக்காமல் விட்டு விட்டார்.

எனினும், தினசரி அவரை பல முறை பலாத்காரம் செய்து வந்துள்ளார். ஒரு நாள் ஜக்காரி இல்லாதபோது, எப்படியோ தப்பி வெளியே வந்து சாலையில் அந்த பெண் ஓடியுள்ளார். வழியில் தென்பட்ட நபரிடம் விபரங்களை கூறி உள்ளார்.

இதன்பின்பு அந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜக்காரியை டெக்சாஸ் போலீசார் கைது செய்தனர். எனினும், ரூ.41 லட்சம் பிணை தொகையில் அவர் பின்னர் விடுவிக்கப்பட்டு விட்டார்.

ஆனால், வீட்டு காவலில் வைக்கப்பட்ட அவரை விசாரணைக்கு அழைக்கும்போது, கோர்ட்டுக்கு வரவேண்டும் என போலீசார் கூறினர். விசாரணைக்கு பின்பு கடத்தலுக்கான குற்றச்சாட்டுகள் வழக்கில் சேர்க்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.

டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம்பெண்ணும், அப்தாப் பூனாவல்லா என்பவரும் இதுபோன்ற ஆன்லைன் வழியேயான டேட்டிங் செயலி வழியே தொடர்பு கொண்டே ஒருவரையொருவர் சந்தித்து கொண்டனர். வாக்கர் படுகொலைக்கு பின்னரும் ஆன்லைன் தளம் வழியே வேறு பெண்களுடன் அப்தாப் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

மேலும் செய்திகள்