ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரம்: தங்க சுரங்கத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு - சீனாவை சேர்ந்த 9 பேர் பலி
|மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் உள்ள தங்க சுரங்கத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சீனாவை சேர்ந்த 9 பேர் பலியாகியுள்ளனர்.
பாங்குய்,
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பாம்பாரி நகரில் சீன நிறுவனத்தால் நடத்தப்படும் தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இந்த தங்க சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கமாக தங்கத்தை வெட்டி எடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் சுரங்க தொழிலாளர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடினர். கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறிய இந்த கொடூர சம்பவத்தில் சுரங்க தொழிலாளர்கள் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
உயிரிழந்த 9 பேரும் சீனாவை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. அதே சமயம் இந்த நாச வேலையின் பின்னணியில் ரஷியாவை சேர்ந்த கூலிப்படை உள்ளதாக பாம்பாரி நகர போலீசார் குற்றம் சாட்டினர்.
இதனிடையே தங்க சுரங்கத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 9 சீனர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டுமென தனது குடிமக்களை சீனா அறிவுறுத்தியுள்ளது.