பொது நீச்சல் குளத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் சுட்டுக்கொலை - மெக்சிகோவில் பயங்கரம்
|மெக்சிகோவில் உள்ள பொது நீச்சல் குளத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ,
மெக்சிகோவில் உள்ள பொது நீச்சல் குளம் ஒன்றில் நேற்று துப்பாக்கி ஏந்திய நபர்கள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நீச்சல் குளத்திற்கு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் அங்கிருந்த கடை, பாதுகாப்பு கேமராக்கள் மற்றும் மானிட்டரை சேதப்படுத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
உள்ளூர் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ஒரு சிறு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்த நிலையில் இருந்தனர். மேலும் பலத்த காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள கோர்டசார் நகரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை தேடும் பணியில் மெக்சிகோ ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.