மத்திய நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 10 பேர் பலி
|உள்ளூர் வாசிகளின் வீடுகளில் உள்ள உணவுப்பொருட்கள், கால்நடைகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் சூறையாடினர்.
அபுஜா,
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய நைஜீரியாவின் தென் மத்திய மாநிலமான பெனுவில் கடந்த செவ்வாய்க்கிழமை (அதாவது 9ம் தேதி) பிற்பகுதியில் உள்ளூர் சமூகத்தின் மீது ஆயுதமேந்திய மர்ம நபர்கள் திடீரென மக்கள் கூடியிருந்த பகுதிக்குள் புகுந்து அதிரடியாக எல்லோரையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தன்ர். பலர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அரசாங்க தலைவர் பிலிப் தெரிவித்தார்.
அந்த மர்ம நபர்கள் அதிநவீன ஆயுதங்கள் ஏந்தியிருந்தனர் என்றும் தெரிவித்தார். மேலும் அவர்கள் உள்ளூர் வாசிகளின் வீடுகளில் உள்ள உணவுப்பொருட்கள், கால்நடைகள் ஆகியவற்றை சூறையாடினர். அதே நேரத்தில் சுமார் 7 வீடுகளை தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் குறித்து நேற்று அதிகாலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.