அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி
|அமெரிக்காவில் வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் பொதுமக்கள் தங்களது பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி உள்ளது. ஆனால் அதுவே அங்கு பல நேரங்களில் விபரீதத்திற்கு வழி வகுக்கிறது. அந்த துப்பாக்கியை வைத்துக்கொண்டு பலர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அண்மைக்காலமாக கடைகள், வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் அமெரிக்காவின் இண்டியானா மாகாணம் புளூங்டன் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கணக்கானோர் பொருட்கள் வாங்குவதற்காக வந்திருந்தனர். அப்போது அங்கு இருந்த ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார். இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த துப்பாக்கி சூட்டில் 19 வயது வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் காயமடைந்தனர்.
துப்பாக்கி சூடு நடத்திய நபர் தப்பி ஓடிய நிலையில் அவர் யார்? தாக்குதலின் பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.