பிரிட்டனில் குஜராத்தி, உருது, இந்திக்கு மவுசு பெருகி வருகிறது
|குஜராத்தி, உருது, இந்தி ஆகியவற்றை பயிற்றுவிப்பது பிரிட்டனின் வருங்கால பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் என அந்நாட்டு எம்.பி. கூறியுள்ளார்.
லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் வடமேற்கு லண்டனின் ஹார்ரோ வெஸ்ட் பகுதிக்கான எம்.பி.யாக இருப்பவர் கேரத் தாமஸ். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தெற்காசிய மொழி பயிற்றுவித்தலுக்காக நிதி மற்றும் படிப்பு சார்ந்த தீவிர உதவியை தொடங்க வேண்டிய தேவை நாட்டுக்கு ஏற்பட்டு உள்ளது.
குஜராத்தி, உருது, இந்தி ஆகியவற்றை பயிற்றுவிப்பது பிரிட்டனின் வருங்கால பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், எங்களுடைய நாட்டின் இளம் சமூகத்தினருக்கு கல்வியில் சிறந்து விளங்குவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமையும் என கூறியுள்ளார்.
இந்தியாவுடனான வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் உள்ள நாங்கள், தெற்காசிய மொழிகளில் கட்டாயம் முதலீடு செய்ய வேண்டும். இந்த மொழி திறன்கள் நம்முடைய உறவை மேம்படுத்த ஒருங்கிணைக்கும் ஒன்றாக இருக்கும்.
வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை இந்தியா கொண்டுள்ளதுடன் இல்லாமல், வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரையும் கொண்டுள்ளது. அது, இங்கிலாந்துக்கு ஒரு முக்கிய உறவு நாடாக இந்தியாவை மாற்றி உள்ளது என அவர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் உள்ள வலிமையான தொடர்பை பாராட்டி பேசிய கேரத், நமது இரு பெரும் நாடுகளும் பெற தகுதி வாய்ந்த பொருளாதார மற்றும் கலாசார பலன்களுக்காக, பகிரப்பட்ட வரலாறு மற்றும் சமூகங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.