அமெரிக்க பாடகி பியோன்சுக்கு 4 கிராமி விருதுகள்: இதுவரை 32 விருதுகளை வென்று சாதனை
|அமெரிக்காவில் நடந்த கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் பிரபல பாடகி பியோன்ஸ் 4 விருதுகளை வென்றார்.
வாஷிங்டன்,
உலகளவில் இசைக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்று கிராமி விருது. திரைப்படங்களுக்கு ஆஸ்கார் எப்படியோ, அதுபோல இசைக்கலைஞர்களுக்கு கிராமி விருது.
இந்த நிலையில் 2023-ம் ஆண்டுக்கான 65-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடந்தது.
விழாவில் அடீல், டெய்லர் ஸ்விப்ட், ஜே-இசட், ஷானியா டுவைன் மற்றும் ஸ்டீவி வொண்டர் போன்ற உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் சிறந்த நடனம் மற்றும் எலக்ட்ரானிக் ரெக்கார்டிங் பிரிவில் 'பிரேக் மை சோல்' என்கிற பாடலுக்காக அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகியும், பாடலாசிரியையுமான பியோன்ஸ் விருதை வென்றார்.
பியோன்ஸ் சாதனை
இதுதவிர சிறந்த 'ஆர் அன்ட் பி' ஆல்பம் உள்பட மேலும் 3 பிரிவுகளில் பியோன்ஸ் விருதுகளை வாங்கி குவித்தார். இதன் மூலம் 32 கிராமி விருதுகளை வென்று பியோன்ஸ் வரலாற்று சாதனை படைத்தார்.
அதே சமயம் சிறந்த பாடல் ஆல்பம் விருதை பியோன்ஸ் தொடர்ந்து 4-வது முறையாக தவறவிட்டார். இந்த ஆண்டு அந்த விருது இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பாடகரும், பாடலாசிரியருமான ஹாரி ஸ்டைல்ஸ் தட்டி சென்றார். அவரது 'ஹாரிஸ் ஹவுஸ்' பாடலுக்கு சிறந்த பாடல் ஆல்பம் விருது கிடைத்தது.
`சிறந்த ஆடியோ புக், நரேஷன் அண்ட் ஸ்டோரிடெல்லிங் ரெகார்டிங்' பிரிவில், பிரபல ஹாலிவுட் நடிகை வயோலா டேவிஸ் தனது வாழ்வின் நினைவுகளை மையப்படுத்தி உருவாக்கிய `பைண்டிங் மீ' என்ற ஆடியோ பதிவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டது.
இந்திய ஆடை வடிவமைப்பாளர் கவுரவ் குப்தா வடிவமைந்த ஆடையில் ராப் பாடகி கார்டி பி.
3-வது கறுப்பின பெண்
அமெரிக்காவின் நான்கு முக்கிய பொழுதுபோக்கு விருதுகளாக 'இஜிஓடி' கருதப்படுகிறது. எம்மி, கிராமி, ஆஸ்கார் மற்றும் டோனி விருதுகளின் சுருக்கமே 'இஜிஓடி'. ஏற்கனவே எம்மி, ஆஸ்கார் மற்றும் டோனி விருதுகளைப் பெற்றிருந்த டேவிஸ், தற்போது கிராமி விருதையும் வென்றிருக்கிறார்.
இதன் மூலம் `எம்மி, கிராமி, ஆஸ்கார் மற்றும் டோனி விருது'களின் வெற்றியாளர் பட்டியலில், 57 வயதான டேவிஸ் 18-வது நபராக இடம் பிடித்துள்ளார். இவர் இந்த பட்டியலில் இடம்பெறும் 3-வது கறுப்பின பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் சிறந்த இசை வீடியோ பிரிவில் 'ஆல் டூ வெல்: தி ஷார்ட் பிலிம்' என்ற குறும்படத்தை எழுதி இயக்கிதற்காக உலகப்புகழ் பெற்ற பிரபல பாடகி டெய்லர் ஷிப்ட் விருதை வென்றார்.
ரிக்கி கேஜ்
3-வது முறையாக கிராமி விருதை வென்ற இந்திய இசையமைப்பாளர்
அமெரிக்காவில் நடந்த 65-வது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் 3-வது முறையாக கிராமி விருதினை வென்று சாதனை படைத்துள்ளார்.
சிறந்த இம்மர்சிவ் ஆடியோ ஆல்பம் பிரிவில், 'டிவைன் டைட்ஸ்' என்ற ஆல்பத்திற்காக இங்கிலாந்தை சேர்ந்த பிரபல டிரம்ஸ் கலைஞர் ஸ்டீவர்ட் கோப்லேண்டுடன் இணைந்து, ரிக்கி கேஜ் கிராமி விருதை பெற்றார்.
கடந்த ஆண்டும் ரிக்கி கேஜ், ஸ்டீவர்ட் கோப்லேண்டுடன் இணைந்து சிறந்த நியூ ஏஜ் ஆல்பம் பிரிவில் கிராமி விருதை வென்றார்.
அதற்கு முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டு வோடர் கெல்லர்மே எனும் தென் ஆப்பிரிக்க இசைக் கலைஞரோடு இணைந்து உருவாக்கிய 'விண்ட்ஸ் ஆப் சம்சாரா' என்ற இசை ஆல்பத்துக்காக ரிக்கி கேஜ் கிராமி விருதை வென்றிருந்தார். இதன் மூலம் 3 கிராமி விருது வாங்கிய ஒரே இந்தியர் என்ற பெருமையை ரிக்கி கேஜ் பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "இப்போதுதான் எனது 3-வது கிராமி விருதைப் பெற்றுள்ளேன். நன்றிகள். வார்த்தைகளற்று நிற்கிறேன். இந்த விருதினை இந்தியாவுக்கு சமர்ப்பிக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல ராப் பாடகி கார்டி பி, இந்திய ஆடை வடிவமைப்பாளர் கவுரவ் குப்தா வடிவமைந்த ஆடையை அணிந்து வந்து, பார்வையாளர்களை அசத்தினார்.