< Back
தேசிய செய்திகள்
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களை விடுதலை செய்ய மத்திய அரசு முயற்சி - ஜெய்சங்கர் தகவல்
தேசிய செய்திகள்

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களை விடுதலை செய்ய மத்திய அரசு முயற்சி - ஜெய்சங்கர் தகவல்

தினத்தந்தி
|
30 Oct 2023 12:48 PM IST

கத்தாரில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேருக்கு அந்நாட்டு கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது.

புதுடெல்லி,

அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர்.

இதனிடையே, கத்தாரில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படை வீரர்கள் 8 பேரையும் அந்நாட்டு அதிகாரிகள் கடந்த ஆண்டு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இந்தியர்கள் அனைவரும் கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் மீதான வழக்கு விசாரணை அந்நாட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிவில் இந்தியர்கள் 8 பேருக்கும் கத்தார் கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்துவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரின் குடும்பத்தினரை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்தார். இது தொடர்பாக ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கத்தாரில் கைது செய்யப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை இன்று சந்தித்தேன். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதை எடுத்துரைத்தேன். குடும்பங்களின் கவலைகள் மற்றும் வலியை முழுமையாக பகிர்ந்து கொள்கிறோம். 8 இந்தியர்களையும் விடுதலை செய்ய தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். இந்த விவகாரத்தில் 8 இந்தியர்களின் குடும்பத்தினருடன் இணைந்து தொடர்ந்து செயல்படுவோம்' என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்