< Back
உலக செய்திகள்
கோத்தபய ராஜபக்சே, மனைவி சிங்கப்பூர் பயணம்; ஜெட்டா செல்லவில்லை என தகவல்
உலக செய்திகள்

கோத்தபய ராஜபக்சே, மனைவி சிங்கப்பூர் பயணம்; ஜெட்டா செல்லவில்லை என தகவல்

தினத்தந்தி
|
14 July 2022 2:33 PM IST

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் சிங்கப்பூருக்கு செல்கிறார் என்றும் ஜெட்டாவுக்கு செல்லவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



கொழும்பு,



இலங்கையில் விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இது மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை விலை கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது.

அதன் அண்டை நாடான இந்தியா உதவிக்கரம் நீட்டி வருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால், அந்நாட்டில் பல மாதங்களாக போராட்டம் நீடித்து வருகிறது.

அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சூழலில், ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 9ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். அவர் எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில், கோத்தபயா தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு நேற்று அதிகாலை ராணுவ விமானத்தில் தப்பி சென்று விட்டார் என தகவல் வெளியானது.

இந்நிலையில், இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை, கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின. நாடாளுமன்ற சபாநாயகர் அபயவர்தனே இதனை தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை முன்னிட்டு நெருக்கடி நிலை உத்தரவை பிறப்பித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் மேற்கு மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பித்து உள்ளார். போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்திற்கு வெளியேயும், குவிந்து உள்ளனர். அவர்கள் பிரதமர் இல்ல கட்டிட உச்சிக்கு சென்று தேசிய கொடியையும் ஏற்றினர்.

இதனை அடுத்து, பிரதமர் இல்லத்திற்கு வெளியே குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர் கூட்டத்தினரை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். பிரதமர் இல்லத்திற்கு சுற்றிலும் வான்வழி ரோந்தும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாலத்தீவுக்கு குடும்பத்துடன் தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு செல்ல இருக்கிறார் என்று அந்நாட்டில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் தகவல் வெளியிட்டது.

இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எஸ்.வி.788 ரக விமானத்தில் இன்று காலை 11.30 மணியளவில் புறப்பட்டு உள்ளார். அவர்கள் இன்று இரவு 7 மணியளவில் சிங்கப்பூர் சென்றடைய உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் இருவரும் சிங்கப்பூரிலேயே தங்குகின்றனர் என்றும் ஜெட்டாவுக்கு செல்லவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் இருவரும் சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகருக்கு செல்ல இருக்கின்றனர் என மாலத்தீவு அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் என பத்திரிகை தகவல்கள் முதலில் தெரிவித்தன. எனினும், இதற்கு தற்போது மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இன்று மதியம் 12 மணி முதல் நாளை மாலை 5 மணிவரை தலைநகர் கொழும்புவில் ஊரடங்கை அமல்படுத்தி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் சட்டம் மற்றும் ஒழுங்கை மீண்டும் கொண்டு வர தேவையான என்ன நடவடிக்கையை எடுக்க வேண்டுமோ அதனை செய்யும்படி ராணுவம் மற்றும் போலீசாருக்கு ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டு உள்ளார். இதன்படி, கவச வாகனங்களில் ராணுவ வீரர்கள் கொழும்பு நகரின் முக்கிய பகுதிகளில் இன்று வலம் வருகின்றனர்.

மேலும் செய்திகள்