< Back
உலக செய்திகள்
சிங்கப்பூரிலேயே அடுத்த 14 நாட்கள் தங்க கோத்தபய ராஜபக்சே முடிவு?
உலக செய்திகள்

சிங்கப்பூரிலேயே அடுத்த 14 நாட்கள் தங்க கோத்தபய ராஜபக்சே முடிவு?

தினத்தந்தி
|
6 Aug 2022 4:54 PM IST

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்னும் 2 வாரம் வரை சிங்கப்பூரிலேயே தங்குவார் என அரசியல் வட்டாரம் கூறுகிறது.



கொழும்பு,



இலங்கையில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் பல மாதங்களாக நீடித்து வருகிறது. உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகியவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்யவோ, விலை கொடுத்து வாங்கவோ முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை இல்லாத வகையிலான எரிபொருள் பற்றாக்குறையால் சிக்கி தவித்து வருகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர்.

இந்த சூழலில், ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த ஜூலை 9ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி விட்டார்.

கோத்தபயா தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு கடந்த ஜூலை 13ந்தேதி காலை ராணுவ விமானத்தில் தப்பி சென்றார். இதன்பின் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு சென்றார்.

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு சென்றடைந்ததும், அவருக்கு 14 நாட்கள் தங்குவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியது. எனினும், கோத்தபயாவுக்கு அரசியல் தஞ்சம் எதுவும் அளிக்கவில்லை என சிங்கப்பூர் அரசு தெளிவாக கூறிவிட்டது.

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதும், நாடாளுமன்றத்தில் கடந்த 21ந்தேதி அதிபராக பதவியேற்று கொண்டார் ரணில் விக்ரமசிங்கே. அதற்கு முன் இடைக்கால அதிபராகவும் ரணில் பொறுப்பேற்று கொண்டார்.

கோத்தபயாவின் விசா காலம் வருகிற 11ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, அவர் சிங்கப்பூரை விட்டு புறப்பட வேண்டும். எனினும், இலங்கையில் நிலைமை இன்னும் சீரடையவில்லை. இதனால், கோத்தபய ராஜபக்சேவை சிங்கப்பூரிலேயே சிறிது காலம் தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என இலங்கை அரசு அனுமதி கோரியுள்ளது. இதனால், அடுத்த 14 நாட்களுக்கு சிங்கப்பூரிலேயே கோத்தபய ராஜபக்சே தங்குவார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

மேலும் செய்திகள்