< Back
உலக செய்திகள்
கோத்தபய ராஜபக்சேவுக்கு அரசு பங்களாவை ஒதுக்கியது இலங்கை அரசு
உலக செய்திகள்

கோத்தபய ராஜபக்சேவுக்கு அரசு பங்களாவை ஒதுக்கியது இலங்கை அரசு

தினத்தந்தி
|
3 Sept 2022 2:19 PM IST

இலங்கை திரும்பியுள்ள கோத்தபய ராஜபக்சே தங்கியிருக்கும் பங்களாவை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கொழும்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்குள்ளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என கூறி போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் கடந்த ஜூலை மாதம் தீவிரமடைந்தது. ஜூலை 9-ம் தேதி போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அப்போது அதிபராக இருந்த கோத்தபயா ராஜபக்சே உடனடியாக பதவி விலக வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்த புகுந்த போராட்டக்காரர்கள் கோத்தபயா ராஜபக்சே பதவி விலக வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஜூலை 13-ம் தேதி கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் இலங்கையை விட்டு தப்பியோடினார். இலங்கையில் இருந்து மாலத்தீவு சென்ற கோத்தபயா பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து சென்றார்.

இந்நிலையில், சுமார் 2 மாதங்கள் கழித்து கோத்தபயா ராஜபக்சே இன்று இலங்கை திரும்பியுள்ளார். தாய்லாந்தில் இருந்து இன்று அதிகாலை இலங்கையின் பண்டாரநாயக்கே சர்வதேச விமான நிலையத்திற்கு கோத்தபயா ராஜபக்சே வந்தடைந்தார். இலங்கை வந்த கோத்தபயாவை ஆளுங்கட்சி எம்.பி.க்கள், மந்திரிகள் விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றனர்.

மக்களின் கொந்தளிப்புக்கு இடையே இலங்கை வந்துள்ள கோத்தபய ராஜபக்சே, கொழும்புவின் விஜிர்மா மாவதா அருகே உள்ள அரசு பங்களாவில் தங்கியுள்ளார். இந்த பங்களாவை சுற்றிலும் 24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பங்களாவில் கோத்தபய ராஜபக்சேவின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்சே வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்