குஜராத்தில் உலகளாவிய ஃபின்டெக் மையத்தைத் திறக்கும் கூகுள் - பிரதமரைச் சந்தித்த பிறகு சுந்தர் பிச்சை அறிவிப்பு
|கூகுள் நிறுவனம் குஜராத்தில் உலகளாவிய ஃபின்டெக் மையத்தைத் திறக்கும் என்று பிரதமரைச் சந்தித்த பிறகு சுந்தர் பிச்சை அறிவித்தார்.
வாஷிங்டன்,
இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு, வர்த்தகம் உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் இந்த சந்திப்பின் போது கையெழுத்தாகியுள்ளது.
இதனிடையே, அமெரிக்க பயணத்தின் போது வெள்ளைமாளிகையில் அமெரிக்க-இந்திய தொழிலதிபர்கள், பெரு நிறுவனங்களின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பங்கேற்றார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, குஜராத்தில் கூகுள் நிறுவனம் உலகளாவிய ஃபின்டெக் செயல்பாட்டு மையத்தை திறக்கும் என்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
"வரலாற்று சிறப்பு மிக்க அமெரிக்க பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையாக இருந்தது. இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை கூகுள் முதலீடு செய்வதாக பிரதமரிடம் பகிர்ந்து கொண்டோம். குஜராத்தின் கிப்ட் (GIFT) நகரில் எங்களின் உலகளாவிய ஃபின்டெக் செயல்பாட்டு மையத்தை திறப்போம் என்பதை அறிவிக்கிறோம்.
டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமரின் தொலைநோக்கு பார்வை அவரது காலத்தை விட முன்னோடியாக இருந்தது. அதை இப்போது நான் மற்ற நாடுகள் செய்ய விரும்பும் ஒரு வரைபடமாக பார்க்கிறேன்," என்று கூறினார்.