இஸ்ரேல் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு.. உள்ளிருப்பு போராட்டம்: 28 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது கூகுள்
|நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் கூகுள் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நியூயார்க்:
இஸ்ரேல் அரசு மற்றும் இஸ்ரேல் ராணுவத்துக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சேவைகளை வழங்குவதற்காக அமேசான் நிறுவனத்துடன், கூகுள் நிறுவனம் 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கூட்டு ஒப்பந்தம் செய்திருந்தது. புராஜெக்ட் நிம்பஸ் என்ற பெயரிலான இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக கூகுள் ஊழியர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நியூயார்க், சியாட்டில் மற்றும் கலிபோர்னியாவின் சன்னிவேல் ஆகிய இடங்களில் உள்ள கூகுள் அலுவலகங்களில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது. நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் நேரடியாக போராட்டத்தில் ஈடுபடாமல் ஆதரவு மட்டும் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 9 பேர் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் விடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. அதன்பின்னர் விசாரணை நடத்திய நிர்வாகம், போராடிய ஊழியர்களில் 28 பேரை பணிநீக்கம் செய்துள்ளது.
இதுதொடர்பாக கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மற்ற ஊழியர்களை வேலை செய்யவிடாமல் இடையூறு செய்வது, அலுவலகத்திற்குள் வர விடாமல் தடுப்பது நிறுவன கொள்கைகளை மீறும் செயலாகும். இந்த செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
போராட்டம் செய்தவர்களை அலுவலக வளாகத்தை விட்டு வெளியேறும்படி பலமுறை கூறியும் கேட்கவில்லை. எனவே, அலுவலக பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர்களை போலீசார் வெளியேற்றினர். இதுவரை தனிப்பட்ட விசாரணைகளை முடித்துள்ள நிலையில், 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளோம். மேலும் தொடர்ந்து விசாரித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.