சொந்த நாட்டுக்கு போ...!! ஆஸ்திரேலியாவில் சீக்கியருக்கு எதிராக இனவெறி தாக்குதல்
|ஆஸ்திரேலியாவில் 15 ஆண்டுகளாக வசித்து வரும் அவர், 10 ஆண்டுகளாக தாஸ்மானியாவில் உள்ளார்.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவின் தாஸ்மானியாவில் ஹோபர்ட் பகுதியில் உணவு விடுதி ஒன்றை வைத்து நடத்தி வருபவர் ஜர்னைல் சிங். கடந்த 2 முதல் 3 மாதங்களாக இவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்படுகிறது.
இதுபற்றி சிங் கூறும்போது, இதற்கு முன்பு ஒருபோதும் இதுபோன்று எனக்கு நடந்தது இல்லை. கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே தொடர்ந்து பல்வேறு முறை இனவெறி தாக்குதல் நடத்தப்படுகிறது.
சொந்த நாட்டுக்கு செல்லும்படியும், காரில் நாயின் கழிவுகளை கொட்டியும் இனவெறி தாக்குதல் தொடருகிறது என கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் 15 ஆண்டுகளாக வசித்து வரும் அவர், 10 ஆண்டுகளாக தாஸ்மானியாவில் உள்ளார்.
இது மனரீதியாக பெரிய அழுத்தம் ஏற்படுத்துகிறது. வீட்டுக்கு வெளியே காரின் கதவு கைப்பிடியில் 4 முதல் 5 நாட்களாக நாயின் கழிவுகளை பூசிவிட்டு சென்றனர்.
இனவெறியை தூண்டும் வகையில் கார் நிறுத்தும் பகுதியில் சுவரின் மீது, இந்தியனே, சொந்த நாட்டுக்கு செல் என்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.
இதுபற்றி போலீசில் புகார் அளித்தேன். வீடியோ சான்று இல்லாமல், இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவருக்கு, இரு முறை இனவெறி மற்றும் மிரட்டல் கடிதங்களும் வந்துள்ளன. காருக்கு சேதம் ஏற்படும் என்று மிரட்டலும் விடப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் பற்றி விசாரணை செய்து வருகிறோம் என தாஸ்மானியா காவல் துறை உயரதிகாரி ஜேசன் எல்மர் தெரிவித்து உள்ளார்.