< Back
உலக செய்திகள்
அமெரிக்கா, சீனா பெயரில் உலக பொருளாதாரம் இரண்டாக பிரிக்கப்பட கூடாது: ஐ.நா. தலைவர்
உலக செய்திகள்

அமெரிக்கா, சீனா பெயரில் உலக பொருளாதாரம் இரண்டாக பிரிக்கப்பட கூடாது: ஐ.நா. தலைவர்

தினத்தந்தி
|
13 Nov 2022 5:00 AM GMT

அமெரிக்கா மற்றும் சீனா பெயரில் உலக பொருளாதாரம் இரண்டாக பிரிக்கப்பட கூடாது என ஐ.நா. அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.



நாம்பென்,


கம்போடியா நாட்டின் நாம்பென் நகரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ குடரெஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, நான் நேற்று நடந்த மாநாட்டில் கூறியது போன்று, நாம் எந்த விலை கொடுத்தேனும் உலக பொருளாதாரம் இரண்டாக பிரிந்து விடாமல் அதனை தவிர்க்க முயல வேண்டும்.

பெரிய அளவில் பொருளாதாரங்களை வழிநடத்தி செல்லும் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் பெயரால் அவை இரண்டாக பிரிக்கப்பட கூடாது என கூறியுள்ளார்.

இரு வெவ்வேறு விதிகள், இரு ஆதிக்க கரன்சிகள், இரண்டு இணையதளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவில் மோதி கொள்ளும் இரண்டு செயல்திட்டங்கள் ஆகியன, திடீர், திடீரென சவால்களை சந்தித்து கொண்டிருக்கும் உலகத்தின் திறனை குழிதோண்டி புதைத்து விடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் வணிக ரீதியிலான ஆயுதங்களில் ஒன்றான பொருளாதார தடையை சீனா மீது விதித்ததற்கு பதிலடியாக, அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி சார்ந்த பொருட்களின் இறக்குமதிக்கு சீனாவும் பொருளாதார தடை விதித்தது. இந்த இரு நாடுகளின் வர்த்தக மோதலால் உலக பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளானது.

கொரோனா பெருந்தொற்றில் கடந்த 2 ஆண்டுகளாக உலகம் சிக்கி தவித்து வரும் சூழலில், மீண்டும் அதுபோன்றதொரு சூழல் ஏற்பட்டு விட கூடாது என்ற நோக்கில் ஐ.நா. தலைவர் பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர், இந்த பிரிவை இணைக்கும் பாலம் போன்று ஆசியன் நாடுகள் அமைந்துள்ளன என கூறியதுடன், அனைவருக்கும் கிடைக்கும் வகையிலான ஒரே உலகளாவிய பொருளாதாரம் மற்றும் உலகளாவிய சந்தை என நாம் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்