< Back
உலக செய்திகள்
இத்தாலியின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார் ஜார்ஜியா மெலோனி!

Image Credit:Reuters

உலக செய்திகள்

இத்தாலியின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார் ஜார்ஜியா மெலோனி!

தினத்தந்தி
|
22 Oct 2022 3:56 PM IST

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியில் அமையும் தீவிர வலதுசாரி அரசாங்கம் இதுவாகும்.

ரோம்,

இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி இன்று பதவியேற்றார்.இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியில் அமையும் தீவிர வலதுசாரி அரசாங்கம் இதுவாகும்.

இந்நிலையில், ஜனநாயகத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என்று சத்தியம் செய்கிறேன் என்று பிரதமர் ஜார்ஜியா மெலோனி உறுதியளித்தார்.

முன்னதாக, இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 2021ஆம் ஆண்டு மரியோ டிராகி பிரதமரானார்.அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக்கொண்டனர். இதன் காரணமாக, பெரும்பான்மை இல்லாததால் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி கடந்த ஜூலை மாதம் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனை தொடர்ந்து, இத்தாலி நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த மாதம் நடந்தது.இந்த தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜார்ஜியா மெலோனி வெற்றி பெற்றார்.

45 வயதான ஜார்ஜியா மெலோனி 'கடவுள், தேசபக்திமிக்க நாடு மற்றும் குடும்பம்' என்ற பழமையான பாசிச முழக்கத்தை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தினார். ஜார்ஜியா மெலோனி ஒரு தீவிர தேசியவாதியாகவும், ஐரோப்பிய எதிர்ப்பு ஒற்றுமை தலைவராகவும் கருதப்படுகிறார். அகதிகள் பிரச்சனைக்கு ஐரோப்பிய ஒன்றியமே காரணம் என மெலோனி கருதுகிறார். மெலோனி இத்தாலியின் பிரதமரானால், அவர் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

உக்ரைன் போரில் உக்ரைனுக்கு இத்தாலி வலுவாக ஆதரவளித்து வருகிறது. அடுத்த அரசாங்கத்தின் கீழ் அது அப்படியே இருக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​மெலோனி உக்ரைனுக்கு தனது இராணுவ உதவி கொள்கையை தொடர உறுதியளித்துள்ளார். ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளையும் அவர் ஆதரித்தார்.

ஆனால் மெலோனியின் கூட்டணியின் இரு முக்கிய தலைவர்களும் ரஷியாவின் தீவிர ஆதரவாளர்கள். நான்கு முறை பிரதமராக இருந்த பெர்லுஸ்கோனி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் நட்புறவு கொண்டுள்ளார்.

2008இல், பெர்லுஸ்கோனி பிரதமராக இருந்த போது தனது மந்திரி சபையில் ஜார்ஜியா மெலோனியை விளையாட்டுத் துறை மந்திரியாக நியமித்தார். இந்நிலையில் தற்போது பெரும் செல்வாக்குடன் பிரதமர் ஆக அவர் உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்