நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும்...!! வீம்புக்கு கொரோனாவை வரவழைத்து கொள்ளும் சீன இளைஞர்கள்
|சீனாவில் இளைஞர்கள் நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பதற்காக, வெளியே சென்று கொரோனாவை வரவழைத்து கொள்ளும் அவலநிலை காணப்படுகிறது.
ஹாங்காங்,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றானது, சீனாவில் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு நவம்பரில் அதிகரிக்க தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீன அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.
எனினும், அந்நாட்டில் கொரோனா பரவல் பற்றிய தகவல்களில் ரகசியம் காக்கப்படுகின்றன. இதனால், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளன.
இந்நிலையில், சீனாவில் பூஸ்டர் டோஸ் உள்பட தடுப்பூசி செலுத்துவது முக்கியம் வாய்ந்தது. அது மருத்துவமனையில் சேருவது மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் என ஐ.நா. அமைப்பு தெரிவித்து உள்ளது. இதனை உலக சுகாதார அமைப்பும் சுட்டி காட்டியுள்ளது.
சீன அரசு, மருத்துவமனையில் சேரும் மற்றும் உயிரிழப்பு ஆகிய நோயாளிகளின் நம்பக்தகுந்த தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம், இதற்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். விரிவான, வைரசின் மரபணு தொடர் பற்றிய உண்மையான விவரங்களை வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து அந்த அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
சீனாவில் கொரோனா பரவல் ஏற்பட்டதும், அதனை கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், மக்களிடம் இதற்கு வரவேற்பு இல்லை. தொடர் போராட்டங்களால் அரசு ஊரடங்கை தளர்த்தி அறிவித்தது.
இதன் எதிரொலியாக கடந்த டிசம்பர் தொடக்கத்தில் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல நகர பகுதிகளில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலான நாட்களில் சீனாவில் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று தகவல் கசிந்தது. இது சீன மக்கள் தொகையில் 17.65 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்தே இந்தியா, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கின. சீனாவில் இருந்து வர கூடிய சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளன.
சீனா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ சேவைகள் மக்களுக்கு கிடைப்பது பற்றாக்குறையான சூழல் காணப்படுகிறது.
இதனால், சீன இளைஞர்கள் பலர் வெறுப்பில் உள்ளனர். அவர்கள், சுகாதார துறை அறிவித்துள்ள எச்சரிக்கைகளை காற்றில் பறக்க விட்டு, விட்டு வெளியே சுதந்திரமுடன் சுற்றி திரிகின்றனர். இதனால், கொரோனா தொற்று ஏற்படும் என எச்சரிக்கப்பட்டாலும் அதற்காக அவர்கள் கவலை கொள்ளவில்லை.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இதுபோல் வெளியே சென்று தொற்றை வரவழைத்து கொள்கின்றனர் என்று தி ஹாங்காங் போஸ்ட் தெரிவித்து உள்ளது..
இதற்கு அவர்கள் கூறும் காரணம், இந்த தொற்றால், வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்துவார்கள். அதில் இருந்து குணமடைவோம். எங்களுக்கு நோயெதிர்ப்பு ஆற்றலும் கிடைக்கும் என கூறுகின்றனர்.
இதுபோன்ற பக்குவமற்ற பேச்சால், நடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. சிலரை நினைத்து பார்க்க முடியாத அளவிலான மருத்துவ சிக்கலான நிலைக்கு கொண்டு போய் விட்டுள்ளது.
போதிய சுகாதார வசதிகளும் அற்ற நிலையில், அவர்கள் எதிர்பாராத கடுமையான விளைவுகளை எதிர்கொள்கிறார்கள். இதுபோக, சீனர்களில் பலர் சீன தயாரிப்பு தடுப்பூசிகளை எடுத்து கொள்வதில்லை.
அது சரியாக வேலை செய்யாது என்றும் குறைவான நோயெதிர்ப்பு ஆற்றலே கிடைக்கும் என்றும் அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
கள்ளச்சந்தையில் வெளிநாட்டு தடுப்பூசிகள் கிடைத்தபோதும், அதிக விலையால் அவற்றை பெறுவதில் வசதியற்ற குடிமக்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது என தி ஹாங்காங் போஸ்ட் தெரிவித்து உள்ளது.
கொரோனா பரவல் தகவல்களை சீன அரசு வெளியிட மறுக்கும் சூழலில், தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு லட்சக்கணக்கில் இருக்க கூடும் என்று மேற்கத்திய நாடுகளின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அது கற்பனைக்கு எட்டாத அளவில் அதிகரித்து இருக்கும் என கூறுகின்றன என்றும் தி ஹாங்காங் போஸ்ட் தெரிவித்து உள்ளது.