தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்புக்கு கைது வாரண்டு
|தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் உள்பட 19 பேருக்கு கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் கடந்த 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் டிரம்ப் (வயது 77). அங்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலிலும் குடியரசு கட்சி சார்பில் இவர்தான் முன்னிலை வசிக்கிறார்.
ஆனால் டிரம்ப் மீது தனக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண்களுக்கு குற்றத்தை மறைப்பதற்காக பணம் வழங்குதல், வெள்ளை மாளிகையில் இருந்து ரகசிய ஆவணங்களை கடத்தி சென்றது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. ஜார்ஜியா மாகாணத்தில் 2020-ம் ஆண்டு நடந்த தேர்தல் மோசடி அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அந்த தேர்தலில் அவர் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனுடன் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
தேர்தல் மோசடி வழக்கு
அந்த சமயத்தில் ஜோ பைடனுக்கு எதிரான வாக்குகளை கண்டறியும்படி உயர்மட்ட தேர்தல் அதிகாரி ஒருவருடன் டிரம்ப் போனில் பேசுவது போன்ற ஆடியோ அங்குள்ள சமூகவலைதளங்களில் கசிந்தது. ஆனால் இந்த வழக்குகள் தனக்கு எதிராக தொடுக்கப்பட்ட சதி என கூறி வரும் டிரம்ப் தன்மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறார்.
எனினும் தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றதாக டிரம்ப் மற்றும் அவருக்கு உதவி செய்த 18 பேர் மீது தேர்தல் மோசடி வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை அங்குள்ள ஜார்ஜியா மாகாண கோர்ட்டில் நடந்து வருகிறது.
20 ஆண்டுகள் சிறை
இந்தநிலையில் குற்றப்பத்திரிகையில் உள்ள 19 பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த கோர்ட்டு முடிவு செய்தது. எனவே டிரம்ப் உள்பட வழக்கில் தொடர்புடைய 19 பேருக்கும் கைது வாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
அதேசமயம் வருகிற 25-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) தாமாக முன்வந்து ஆஜராகவும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.2 கோடி வரை அபராதமும் விதிக்கப்படலாம் என கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.