< Back
உலக செய்திகள்
காசா:  பாலஸ்தீனியர்களின் பலி எண்ணிக்கை 34,049 ஆக உயர்வு
உலக செய்திகள்

காசா: பாலஸ்தீனியர்களின் பலி எண்ணிக்கை 34,049 ஆக உயர்வு

தினத்தந்தி
|
20 April 2024 6:31 PM IST

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் ராணுவம், 37 பாலஸ்தீனியர்களை தாக்குதல் நடத்தி கொன்றுள்ளது. 68 பேர் காயமடைந்து உள்ளனர்.

காசா,

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது.

இதன்படி, 1,200-க்கும் மேற்பட்ட மக்கள் வன்முறைக்கு உயிரிழந்தனர். 200-க்கும் மேலானவர்கள் பணய கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. சிலர் பணய கைதியாக இருக்கும்போதே உயிரிழந்து உள்ளனர்.

ஹமாஸ் அமைப்பிடம் சிக்கியுள்ள மீதமுள்ளவர்களையும் மீட்போம் என இஸ்ரேல் சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 34,049 ஆக உயர்ந்து உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

இதுபற்றி பத்திரிகைகளுக்கு அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் ராணுவம், 37 பாலஸ்தீனியர்களை தாக்குதல் நடத்தி கொன்றுள்ளது. 68 பேர் காயமடைந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், பாலஸ்தீனியர்களின் மொத்த பலி எண்ணிக்கை 34,049 ஆக உயர்ந்து உள்ளது. 76,901 பேர் மொத்தத்தில் காயமடைந்து உள்ளனர். இந்த தாக்குதலில் சிக்கி சிலர் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர். கடுமையான தாக்குதல் மற்றும் போதிய மீட்பு படையினர் இல்லாதது ஆகியவற்றால் அவர்கள் மீட்கப்படாமல் உள்ளனர் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்