< Back
உலக செய்திகள்
Gaza Ceasefire Proposal Hamas Qatar

Image Courtesy : AFP

உலக செய்திகள்

காசா போர்நிறுத்த முன்மொழிவு; ஹமாஸ் இன்னும் பதிலளிக்கவில்லை - கதார் அரசு தகவல்

தினத்தந்தி
|
8 Jun 2024 1:44 AM GMT

காசா போர்நிறுத்த முன்மொழிவு தொடர்பாக ஹமாஸ் இன்னும் பதிலளிக்கவில்லை என கதார் அரசு தெரிவித்துள்ளது.

தோகா,

பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். அதோடு வெளிநாட்டினர் உள்பட சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழித்து, பணயக் கைதிகளை மீட்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போர் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அதே சமயம், இந்த போரில் காசா நகரம் முழுவதும் சின்னாபின்னமாகி உள்ளது. அங்கு 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளனர். மேலும் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதோடு, லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.

இந்த போருக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் இஸ்ரேல் அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் ராணுவம் காசாவில் உள்ள ரபா உள்ளிட்ட நகரங்களில் போரை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.

இதனிடையே காசாவில் போர்நிறுத்தம் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் கத்தாரில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் 7 நாட்கள் தற்காலிகமாக போர்நிறுத்தம் ஏற்பட்டபோது நூற்றுக்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் காசாவில் இடைவிடாமல் போர் நடந்து வருகிறது.

இந்நிலையில் காசாவில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர்நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகளை பரிமாறிக் கொள்வதற்கான முன்மொழிவு குறித்து ஹமாஸ் அமைப்பு இதுவரை பதிலளிக்கவில்லை என கத்தார் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்