< Back
உலக செய்திகள்
காசா:  ஷிபா மருத்துவமனையில் 50 ஹமாஸ் பயங்கரவாதிகள் படுகொலை; இஸ்ரேல் அதிரடி
உலக செய்திகள்

காசா: ஷிபா மருத்துவமனையில் 50 ஹமாஸ் பயங்கரவாதிகள் படுகொலை; இஸ்ரேல் அதிரடி

தினத்தந்தி
|
22 March 2024 3:49 AM IST

காசாவில் சந்தேகத்திற்குரிய 160 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

டெல் அவிவ்,

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படை, காசா பகுதியில் உள்ள மிக பெரிய ஷிபா மருத்துவமனையில் புகுந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதனை அறிந்ததும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

வளாகத்திற்குள் படையினர் நுழைந்து நடத்திய தாக்குதலில் நேற்று காலை 50 ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த திங்கட்கிழமை காலை முதல் இதுவரை வளாகத்திற்குள் 140-க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகளை படை வீரர்கள் படுகொலை செய்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய 160 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணை நடத்துவதற்காக, அவர்கள் இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனை வளாகத்தில் கண்டறியப்பட்ட ஆயுதங்களையும் வீரர்கள் கைப்பற்றி உள்ளனர்.

எனினும், பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை என்றும் மருத்துவ உபகரணங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் படையினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த மருத்துவமனை வளாகத்திற்குள் இருந்து கொண்டு ராக்கெட் தாக்குதல்களை நடத்துதல், கட்டிடத்தின் மைய பகுதியில் பணய கைதிகளை மறைத்து வைப்பது, சித்ரவதை செய்வது, அருகேயுள்ள பகுதிகளுக்கு சுரங்கங்களை தோண்டுவது என பல விரிவான விசயங்களுக்கு மருத்துவமனையை அந்த அமைப்பு பயன்படுத்தி வந்திருக்கிறது.

வளாகத்தின் கீழே 5 லட்சம் லிட்டர் எரிபொருளை மறைத்து வைத்தது பற்றிய தொலைபேசி அழைப்பு பதிவு ஒன்றையும் இஸ்ரேல் வெளியிட்டது.

மேலும் செய்திகள்